நாடு முழுவதும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் பணியின் போது மரணமடைந்த காவல்துறையினர் எண்ணிக்கை தொடர்பான விவரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். மேலும், நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியின்போது மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களின் தியாகத்தை, நாடு ஒருபோதும் மறக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 21 – தேசிய காவல்துறை நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய காவல் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், “நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியின்போது, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலான ஓர் ஆண்டு காலத்தில் 188 காவலர்கள் மரணமடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நாட்டுக்குச் சேவை செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடினமான பணி உள்ளது – அது பகல் அல்லது இரவு, குளிர்காலம் அல்லது கோடை, பண்டிகை அல்லது வழக்கமான நாள் என எதுவும் கிடையாது. காவல்துறையினருக்கு தங்கள் குடும்பத்துடன் பண்டிகைகளைக் கொண்டாட வாய்ப்பு கிடைப்பதில்லை.
காவல்துறையில் பணியாற்றுவோர், தங்களது வாழ்நாளில் மிகவும் முக்கியமான காலத்தை குடும்பத்தை விட்டு விலகி, நாட்டை ப் பாதுகாக்கும் பணிக்காகவே செலவிடுகிறார்கள்” என்றும், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை பாதுகாப்புப் பணியின்போது மரணமடைந்த 36,250 காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.