டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மகள் கவிதா நேற்று (மார்ச் 11) அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜரானது தேசிய அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
மதுபான கொள்கை ஊழல் சிக்கிய மணிஷ் சிசோடியா!
கடந்த 2021-ஆம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய மதுபான கொள்கையின்படி தனியாருக்கு மதுபான உரிமம் வழங்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து புதிய மதுபான கொள்கை திரும்பபெறப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சிபிஐ இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மணிஷ் சிசோடியா திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை வளையத்தில் கவிதா
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சௌத் குரூப் தொழிலதிபர்கள் குழு மதுபான உரிமம் வாங்குவதற்காக ரூ.100 கோடியை ஆம் ஆத்மி கட்சி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு வழங்கியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
செளத் குரூப்பில் அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயினபள்ளி, , சந்திரசேகர் ராவ் மகள் கவிதா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.பி. முகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி, அவரது மகன் ராகவ் மகுண்டா, சரத் ரெட்டி ஆகியோர் பிரதிநிதிகளாக உள்ளனர்.
அருண் ராமச்சந்திர பிள்ளையிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இவர் முக்கியமானவர் என்கிறது அமலாக்கத்துறை.
மேலும், “ஆம் ஆத்மி கட்சி விஜய் நாயரிடம் அருண் ராமச்சந்திர பிள்ளை பேரம் பேசியுள்ளார். இவர் கவிதாவின் பினாமியாக செயல்பட்டு அவரது அறிவுறுத்தலின்படி ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். டெல்லியில் தனியாருக்கு வழங்கப்பட்ட மதுபான உரிமங்களில் 30 சதவிகித உரிமங்களை சவுத் குரூப் பெற்றுள்ளது” என்று குற்றம் சாட்டுகிறது அமலாக்கத்துறை. இந்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மார்ச் 13 ஆம் தேதி அவரிடம் விசாரணை நடத்த கஸ்டடி எடுத்துள்ளது அமலாக்கத்துறை.
மதுபான எல்1 உரிமம் பெற்ற இந்தோ ஸ்பிரிட்ஸில் 32.5 சதவீத பங்குதாரராக பிள்ளை இருந்துள்ளார். இண்டோ ஸ்பிரிட்ஸ் என்பது அருண் ராமச்சந்திர பிள்ளை (32.5 சதவீதம்), பிரேம் ராகுல் (32.5 சதவீதம்) மற்றும் இண்டோஸ்பிரிட் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (35 சதவீதம்) ஆகியோரின் கூட்டாண்மை நிறுவனமாகும்,
இதில் அருண் பிள்ளை மற்றும் பிரேம் ராகுல் ஆகியோர் கவிதா மற்றும் மகுண்டா சீனிவாசலு ரெட்டி மற்றும் அவரது மகன் ராகவா மகுண்டா ஆகியோரின் பினாமிகள் ஆவர் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள கவிதாவின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில மாதங்களில் மட்டும் கவிதா, 7 முறை செல்போன் சாதனங்களை மாற்றியதன் பின்னணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
ராமச்சந்திர பிள்ளையிடம் விசாரணை நடத்திய பிறகு, கடந்த மார்ச் 8-ஆம் தேதி கவிதாவை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இந்தநிலையில் நேற்று (மார்ச் 11) காலை 11 மணியளவில் கவிதா, டெல்லி துக்ளக் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து, அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சென்றார். அப்போது வழிநெடுகிலும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அவரிடம் தொடர்ந்து 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மார்ச் 16-ஆம் தேதி விசாரணைக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிட்டனர்.
யார் இந்த கவிதா?
கல்வகுந்த்லா கவிதா மார்ச் 13-ஆம் தேதி, 1978-ஆம் ஆண்டு தெலங்கானாவில் உள்ள கரிம்நகர் பகுதியில் சந்திரசேகர் ராவ், ஷோபா தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். இவர் ஹைதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விக்னய ஜோதி பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்தார். பின்னர் அமெரிக்காவிற்கு சென்று Master of Science படித்தார்.
2003-ஆம் ஆண்டு தேவனபள்ளி அனில் குமார் என்ற தொழிலதிபரை கவிதா திருமணம் செய்த பின்னர் அமெரிக்காவில் மென் பொறியாளராக பணியாற்றினார். இந்த தம்பதிகளுக்கு ஆதித்யா, ஆர்யா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
2004-ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 2006-ஆம் ஆண்டு தனி மாநில கோரிக்கையை முன்வைத்து சந்திரசேகர் ராவ் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் சேர்ந்து பலரும் போராட்டத்தில் குதித்தனர். அந்த நேரத்தில் கவிதா தனது தந்தைக்கு பக்க பலமாக இருந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆந்திரா முழுவதும் பயணம் செய்து கவிதா மக்களை சந்தித்தார். இந்த பயணத்தில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் சமூகம் பற்றிய புரிதல் ஏற்பட காரணமாக இருந்தது என்று அவர் தெரிவித்திருந்தார்.
தெலங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கிய கவிதா, 2006-ஆம் ஆண்டு ஜாக்ருதி என்ற அமைப்பை உருவாக்கினார். ஜாக்ருதி என்பதற்கு விழிப்புணர்வு என்று பொருள். தெலுங்கானா அமைய வேண்டும் என்பதே இதன் முக்கிய இலக்காக இருந்தது.
தனி மாநிலம் அமைவதற்கு பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் ஆதரவு திரட்டியதில் ஜாக்ருதி அமைப்பின் பங்கு மிக முக்கியமானதாகும்.
ஜாக்ருதி அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கோடு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தார். இதன் மூலம் பலர் அரசு வேலை வாய்ப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது 8500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் ஈர்க்கப்பட்ட கவிதா, கவிதாம்மா என்று பலராலும் அழைக்கப்படுகிறார்.
தொடர் போராட்டத்தின் விளைவாக 2014-ஆம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியமைத்து சந்திரசேகர் ராவ் முதல்வரானார்.
2014-ஆம் ஆண்டு தெலங்கானாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்டு கவிதா வெற்றி பெற்றார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கவிதா நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அரவிந்த் தர்மபுரி என்பவரிடம் தோல்வி அடைந்தார்.
கவிதா தெலங்கானா ராஷ்ட்ரிய வித்யுத் கார்மிகா சங்கம் ( மின்சார ஊழியர் சங்கம்), தெலங்கானா அங்கன்வாடி ஊழிர்கள் சங்க தொழிற்சங்க தலைவராக உள்ளார்.
மக்களவை தொகுதியில் கவிதா தோல்வி அடைந்ததால், தெலங்கானா மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த சூழலில் தான், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதா சிக்கியுள்ளதால், தெலங்கானாவில் பாஜகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியினர் முன்வைத்து வருகின்றனர்.
சந்திரசேகர் ராவ் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான அரசியலை முன்னெடுத்து வருவதால், அவரை முடக்குவதற்காக கவிதாவை கைது செய்ய முயற்சிக்கின்றனர் என்று பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
கவிதா ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் தலைவர் சந்திர சேகர் ராவிற்கும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் எதிரான இந்த மிரட்டல் உத்திகள் எங்களை தடுக்காது. சந்திரசேகர் ராவ் தலைமையில் பிரகாசமான இந்தியாவை உருவாக்குவதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்திருந்தார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அடுத்தடுத்து முக்கிய அரசியல் பிரமுகர்களின் கைது சம்பவங்கள், அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
செல்வம்
பிரசாந்த் கிஷோர் அழுத்தம்: சீமான் மீது வழக்கு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆர்.எஸ்.எஸ். மேடையில் பெண்கள்? ராகுல் கேள்விக்கு பதில் தேடும் பானிபட் அமர்வு!