கோயிலில் அரசியல் படித்த கலைஞர்

Published On:

| By Abdul Rafik B

“கோயிலில் குழப்பம் விளைவித்தேன்… கோயில் கூடாது என்பதற்காக அல்ல… கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதற்காக” என்கிற பராசக்தி படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் கலைஞர் கருணாநிதியின் ஞானத்தில் திடீரென உதித்தது அல்ல… அதற்குப் பின்னால் கலைஞர் தனது சிறுவயதில் சந்தித்த அவமானமும் அந்த நிலையை மாற்ற முயற்சித்த ஆழமான அரசியலும் உள்ளது.

திருவாரூர் அருகே உள்ள திருக்குவளையில் பிறந்த கலைஞர் கருணாநிதியை அவரது தந்தை உள்ளூர் பள்ளியில் சேர்த்து கல்விக்கு அடித்தளமிட்டார். அதே நேரத்தில் கலைஞர் கருணாநிதிக்கு இசையில் ஆர்வம் இருப்பதையும் அவரது தந்தை முத்துவேலர் கண்டறிந்தார்.

இதனை அடுத்து இசைப்பள்ளியில் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டார் கலைஞர் கருணாநிதி. அன்றைய காலங்களில் இசைப்பள்ளிகள் கோயிலில் நடைபெறுவது தான் வழக்கம். அது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்த பல பெரிய மனிதர்கள் வந்துபோகும் இடமாகவும் இருந்தது.

இதனால், இசை பயிற்சிக்குச் சென்ற கலைஞர் கருணாநிதிக்கு மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டது. சாதியை காரணம் காட்டி தோளில் அணிந்திருந்த துண்டையும் இடுப்பில் கட்டிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டார். செருப்பு அணிவது அவமரியாதையாக கருதப்பட்டதால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக தனது சுய சரிதையான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டுப்பாடுகளை கடுமையான அடிமைத்தனம் என விமர்சித்த கலைஞர் கருணாநிதி, தெய்வீகத்தின் பெயராலும், சாதி, மத சம்பிரதாயங்களின் பெயராலும் ஒரு சமுதாயம் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை தனது பிஞ்சு மனம் கடுமையாக எதிர்க்க துணிந்ததாக தெரிவித்துள்ளார்.

இசையை கற்றுக்கொள்ள சென்ற அவருக்கு, சாதியை காரணம் காட்டி ஒருவர் எங்கு அமர வேண்டும், என்ன பாடல்களை பாடலாம், பாடக்கூடாது, எங்கிருந்து பாடலாம் என்பது போன்ற பாடங்களே கற்பிக்கப்பட்டன. 

இதனாலேயே இசைப்பயிற்சியை வெறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த இசைப்பயிற்சி தான் தனது முதல் அரசியல் வகுப்பு எனவும் கலைஞர் கருணாநிதி கூறியிருக்கிறார்.  

ஊரில் மேட்டுக்குடியில் இருந்த சில நல்ல மனிதர்கள் இந்த அவலங்களை திருத்த முயற்சி செய்ததாகவும் ஆனால், அவர்களது புதுமையான முயற்சிகள் ஆறாத புண்ணுக்கு புணுகு தடவும் வேலையை மட்டுமே செய்ததாக அவர் விமர்சித்துள்ளார். அடிமைத்தனத்தை அனுபவித்த ஒடுக்கப்பட்ட கும்பலில் இருந்து கிளம்பும் புரட்சிக் குரல்கள் ஆறாத புண்ணை அறுவை சிகிச்சையால் சுகப்படுத்தும் சக்தி பெற்றவை என அவர் நம்பினார்.

இதனை அடுத்து சில ஆண்டுகளில் அரசியலுக்குள் நுழைந்த கலைஞர், பெரியாரின் மாணவனாய், அண்ணாவின் போர்ப்படை தளபதிகளில் ஒருவராய் மாறினார்.

பின்னர், தமிழக முதலமைச்சராக பதவியேற்ற கலைஞர் கருணாநிதி, சமூக அறுவை சிகிச்சை மூலம் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்டும் பல திட்டங்களை செயல்படுத்தினார். சமத்துவபுரங்களை நிறுவினார், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடுகளை உருவாக்கி தந்தார், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டத்தை நிறைவேற்றினார்.

கடவுள் நம்பிக்கை இல்லாத கலைஞர் கருணாநிதி இந்து மத நம்பிக்கைகளை சிதைப்பதாக ஒரு கும்பல் எதிர்த்துக்கொண்டே இருந்தது, ஆனால், கடவுளை நாம் ஏற்றுக்கொள்வது பெரிதல்ல, கடவுள் நம்மை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நாம் நடக்கிறோமா என்பது தான் முக்கியம் என பதிலளித்து சமூக நீதியை நோக்கிய தனது பயணத்தை கடைசி வரை கைவிடாமல் தொடர்ந்தார் கலைஞர் கருணாநிதி.

அப்துல் ராஃபிக்

கலைஞர் நினைவு தினம்: முதல்வர் தலைமையில் பேரணி!