தர்மபுரி… பாமகவின் வெற்றி மாங்கனி நழுவியது எப்படி?

அரசியல்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணி முழுமையான வெற்றியை பெற்றுவிட்டது.

ஆனால் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த சில மணி நேரங்களில் தர்மபுரி தொகுதி கொடுத்த சர்ப்ரைஸை பாமகவினரும், திமுகவினரும் இன்னமும் மறக்கவில்லை.

தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தால் தற்போதைய மோடியின் கூட்டணி ஆட்சி அமைச்சரவையில் தமிழ்நாட்டில் இருந்து அமைச்சராகும் வாய்ப்பு செளமியா அன்புமணிக்கு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், குறைந்த வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த விரக்தியில் இருக்கிறார்கள் பாமகவினர்.

தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளராக அ.மணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி, அதிமுக சார்பில் டாக்டர் அசோகன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணும் தினமான ஜூன் 4 காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டன. தொகுதியில் 9,404 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தபால் வாக்குகளில் திமுக 3,366, பாமக 2,922, அதிமுக 2,039, நாம் தமிழர் கட்சி 805, நோட்டாவுக்கு 105 அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகள் போட்டுள்ளனர், மீதி வாக்குகளை சுயேச்சைகள் பெற்றனர்.
அடுத்து ஈவிஎம் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது.

முதல்வர் போன்… பதறிய திமுக நிர்வாகிகள்!

முதல் ரவுண்டில் இருந்து எட்டு ரவுண்டுகள் வரை தர்மபுரியில் பாமக வேட்பாளரான சௌமியா அன்புமணி திமுக வேட்பாளர் மணியை விட சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வரை அதிகம் பெற்றிருந்தார்.

இதனால் பாமகவினர், ‘போட்டியிட்ட பத்து தொகுதிகளில் இது ஒன்றையாவது நாம் வெற்றி பெற்றுவிடுவோம்’ என்று உற்சாகமான நம்பிக்கையில் இருந்தனர். பாமக நிர்வாகிகள் சௌமியாவுக்கு வாழ்த்து சொல்லவே தொடங்கிவிட்டனர். பாமக தலைவர் அன்புமணியும் அலைபேசி மூலமாக தர்மபுரி நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இதே நேரம் திமுக நிர்வாகிகளுக்கோ பெரும் டென்ஷன்.   தர்மபுரி நகரத்தில் அதியமான் ஹோட்டல் நான்காவது மாடி 411 ஆம் ரூமில் தங்கியிருந்த பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மாவட்டச் செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணியன், பழனியப்பன் ஆகியோருக்கு முதலமைச்சரின் தனிச் செயலாளர் தினேஷின் செல்போனில் இருந்து அடுத்தடுத்து அழைப்புகள் வந்தன.

போனை எடுத்த எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திடம் பேசிய முதலமைச்சர்… தர்மபுரி பற்றி டென்ஷனாக விசாரித்தார். அப்போது எம்.ஆர்.கே. ‘இன்னும் அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி எண்ண வேண்டியிருக்கு தலைவரே… நிச்சயம் நமக்கு லீடிங் வந்துடும்…’ என்று சொல்லியிருக்கிறார்.

அப்போதும் திருப்தியடையாத முதலமைச்சர், ‘ஜெயிச்சுடுவோமா?’ என்றே நேரடியாக கேட்டிருக்கிறார். ‘நிச்சயம் ஜெயிடுச்சுவோம் தலைவரே…’ என்று சொல்லியிருக்கிறார் எம்.ஆர்.கே.

அவர் சொன்னது போலவே… ஒன்பதாவது ரவுண்டில் இருந்தே சௌமியா அன்புமணியின் லீடிங் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. சௌமியாவின் லீடிங் குறைந்துகொண்டே வர ஒரு கட்டத்தில் திமுக வேட்பாளர் மணி லீடிங் எடுக்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் திமுக மாசெக்களுக்கும், பொறுப்பு அமைச்சருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதியானது.

வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் மணி 4,32,667 வாக்குகள், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள், அதிமுக வேட்பாளர் அசோகன் 2,93,629 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 65,381 வாக்குகளும், நோட்டாவுக்கு 9,198 வாக்குகளும் பதிவானது.  மற்றும் 21 சுயேட்சை வேட்பாளர்கள் கொஞ்சம் கொஞ்சம் வாக்குகளை பிரித்தனர். 21 ஆயிரத்து 300 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் மணி.

பாமகவிடம் இருந்து பெரும்பாடு பட்டு வெற்றியை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பறித்ததில் திமுகவுக்கு ஆறுதல்தானே தவிர பெரிய கொண்டாட்டம் இல்லை.

அதேநேரம் பாமகவினரோ வெறும் 21 ஆயிரம் ஓட்டில் வெற்றியைத் தவறவிட்டோமே என்று அழ ஆரம்பித்துவிட்டனர். வாக்கு எண்ணிக்கையன்று வேட்பாளர் என்ற முறையில் அங்கே சென்றிருந்த சௌமியா அன்புமணி முடிவு அறிவிக்கப்பட்டதும் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிருந்தார். அங்கேயே நன்றி சொல்லி பேட்டியும் அளித்தார்.

சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை!

தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் திமுக, அதிமுக, பாமக எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளது என்று பார்ப்போம்.

மேட்டூர்
திமுக 67,824
பாமக 63,265
அதிமுக 56,044

பாலக்கோடு
திமுக 71,344
பாமக 60,878
அதிமுக 53,607

அரூர்
திமுக 85,850
அதிமுக 47,641
பாமக 46,175

மேற்குறிப்பிட்ட மேட்டூர், பாலக்கோடு, அரூர் மூன்று தொகுதிகளிலும்
திமுக அதிகமான வாக்குகள் பெற்றுள்ளது. அதேபோல பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி, பென்னாகரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் பாமக முன்னிலை பெற்றுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி

பாமக 82,434
திமுக 73,700
அதிமுக 42,653

தருமபுரி

பாமக 79,527
திமுக 66,002
அதிமுக 48,093

பென்னாகரம்

பாமக 76,166
திமுக 64,581
அதிமுக 43,552

திமுகவுக்கு ஆறுதல்… பாமகவுக்கு அதிர்ச்சி தந்த அரூர்

ஆக இந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அரூர் தொகுதிதான் வெற்றியை கடைசி நேரத்தில் முடிவு செய்திருக்கிறது.

பென்னாகரம், தருமபுரி, மேட்டூர் மூன்று தொகுதியிலும் பாமக சிட்டிங் எம்எல்ஏகள், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, அரூர் மூன்று சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இம்மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அரூர் தொகுதி தலித் மக்கள் நிறைந்தது. கம்யூனிஸ்டு கட்சியும், விசிகவும் அரூரில் அடர்த்தியாக உள்ளன. இந்த வகையில்தான் மற்ற தொகுதிகளில் எல்லாம் ஏற்பட்ட இழப்பை அரூரில் ஈடு செய்திருக்கிறது திமுக.

“அரூர் பற்றி ஏற்கனவே கணக்கு போட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. அங்குள்ள கம்யூனிஸ்டு, விசிக நிர்வாகிகளிடம் பேசி அறுவடை வேலையை ஆரம்பத்திலேயே செய்திருக்கிறார்கள் பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.வும், அரூரை உள்ளடக்கிய மாசெ பழனியப்பனும்.

அதனால்தான் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று அரூர் இன்னும் வரலை, வந்ததும் நமக்கு தூக்கிடும் என்று நம்பிக்கையாக சொல்லியிருந்தார் எம்.ஆர்.கே. கடைசியில் அரூர்தான் பாமகவுக்கு அதிர்ச்சியையும், திமுகவுக்கு ஆறுதலையும் கொடுத்திருக்கிறது” என்கிறார்கள் லோக்கல் திமுக நிர்வாகிகள்.

பாமக தரப்பிலோ, ‘பாமக மாணவரணி மாநிலச் செயலாளர் முரளி சங்கர் அரூர் தொகுதியைச் சேர்ந்தவர். 2016 இல் அரூர் தனித் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டவர், கணிசமான வாக்குகளைப் பெற்றவர். தலித் மக்களிடையே நல்ல தொடர்பும் அறிமுகமும் பெற்ற பாமக நிர்வாகி.

பாமக மாணவரணி மாநிலச் செயலாளர் முரளி சங்கர்

ஆனால் இவரை இந்த முறை விழுப்புரம் எம்பி வேட்பாளராக அறிவித்து அங்கே அனுப்பிவிட்டார்கள். அதனால் அரூரில் முரளிசங்கர் முழுமையாக பணியாற்ற முடியவில்லை. ஒருவேளை அவர் அரூரில் மட்டும் தீவிர கவனம் செலுத்தியிருந்தால் அரூரிலும் கூட பாமக சில லாபங்களைப் பெற்று மிகக் குறுகிய வித்தியாசத்திலாவது வெற்றி பெற்றிருக்கலாம்” என்கிறார்கள்.

பெண்கள் ஓட்டு

தமிழகம் முழுவதும் பெண்களுக்கான கலைஞர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திமுக பெண்கள் வாக்குகளை பெருமளவு ஈர்த்திருக்கிறது.

ஆனால், தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியின் அணுகுமுறை கணிசமான பெண் வாக்காளர்களை கவர்ந்திருக்கிறது என்கிறார்கள் பாமகவினர்.

சௌமியா தேர்தல் பரப்புரையில் மிக எளிமையாக அனைவரோடும் பழகினார். குறிப்பாக வன்னியர் சமுதாய பெண்கள் மட்டுமல்ல அனைத்து சமுதாய பெண்களிடமும் அவரது அணுகுமுறை பெரிய பேசுபொருளானது.

அவர் மட்டுமல்ல அவரது இரு மகள்களும் வீடு வீடாக சென்று திண்ணையில் அமர்ந்து, வாசல்படியில் அமர்ந்து கடைகளில் ஏறியிறங்கி தங்கள் அம்மாவுக்காக வாக்கு சேகரித்த விதம் சமூக தளங்களில் வைரலானது. தர்மபுரியில் அவர்கள் பார்க்காத ஊர்களே இல்லை என்ற அளவுக்கு சௌமியாவின் மகள்களுடைய ஒன் டு ஒன் பிரச்சாரம் அவருக்கு பெரும் சாதகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கட்சி கடந்த அன்புமணி நெட்வொர்க்!

தேர்தலுக்கு முன்பு அதிமுக திமுக கிளை நிர்வாகிகள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரையில் அன்புமணியே பேசியுள்ளார். ‘நீங்க எந்த கட்சியில் வேண்டும் என்றாலும் இருங்க. ஆனாலும் சௌமியாவுக்கு ஓட்டுப் போடுங்க’ என்று பேசியதோடு… கழகங்களில் உள்ள வன்னியர் நிர்வாகிகளுக்கு கவனிப்பையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.வும் அதிமுக நிர்வாகிகளிடம், ‘உங்களுக்குரிய வன்னியர் சமுதாய வாக்குகளை நீங்க சிந்தாம சிதறாம வாங்கிடுங்க’ என்று பேசி சில ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் அது முழுமையாக ஒர்க் அவுட் ஆனதாக தெரியவில்லை என்கிறார்கள் திமுக தரப்பில். இவ்வளவைத் தாண்டியும் அரூரின் சமுதாய நிலவரம்தான் திமுகவை இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைய வைத்திருக்கிறது!

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கங்கனாவை கன்னத்தில் அறைந்த காவலர்!

ஃபேக் எக்சிட் போல்… பங்கு சந்தை முறைகேடு: மோடி, அமித்ஷாவை குற்றம்சாட்டும் ராகுல்

+1
1
+1
3
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

1 thought on “தர்மபுரி… பாமகவின் வெற்றி மாங்கனி நழுவியது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *