அப்பாவு பேசியது எப்படி அவதூறாகும்?: அதிமுக நிர்வாகிக்கு ஐகோர்ட்டு கேள்வி!

Published On:

| By Kavi

சபாநாயகர் அப்பாவு பேசியது எப்படி அவதூறாகும் என்று அதிமுக தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு சென்னை அடையாறில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு,  “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து தெரியாமல் இருந்ததாகவும், அவர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொள்ள இருந்ததாகவும், ஆனால் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் அதை மறுத்துவிட்டார்’”என்றும் கூறியிருந்தார்.

அப்பாவு இவ்வாறு பேசியிருப்பது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளருமான பாபு முருகவேல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது சபாநாயகர் அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்குத் தடை விதிக்க கோரியும் சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (அக்டோபர் 17) நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாபு முருகவேல் தரப்பில், “கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருந்ததால், கட்சி சார்பில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அதற்கு கட்சி அங்கீகாரம் கொடுத்துள்ளது” என்றும் தெரிவித்தார்.

சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். அவர், “அரசியல் கட்சி சார்பில் வழக்கு தாக்கல் செய்வதாக இருந்தால் அக்கட்சியின் தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோதான் தாக்கல் செய்ய முடியும்” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், “அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை உள்ளது. 40 எம்.எல்.ஏ.க்கள் யாரும் வழக்கு தொடரவில்லை. அப்பாவு யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக கற்பனையாக கூறக்கூடாது. அதிமுக தனது 5 ஆண்டுகால ஆட்சியை பூர்த்தி செய்துவிட்டது. யாரும் கட்சித்தாவவில்லை. அப்பாவு பேச்சால் எப்படி அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் சபாநாயகர் அப்பாவுவின் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

ஏஐ-யிலும் தெற்கு, வடக்கு பிரிவினையா? – பாய்ந்த ஷோஹோ ஸ்ரீதர் வேம்பு

“முதிர்ச்சியின்றி உதயநிதி பதிலளிக்கிறார்” : எடப்பாடி பழனிசாமி