அரசியலில் குற்றங்கள் அதிகரிப்பது ஒரு தீவிர பிரச்சனை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. How Can Convicted Politicians Come Back
கிரிமினல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களை வாழ்நாள் முழுவதும் தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், குற்றச்செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் 6 ஆண்டுகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று கூறி இதில் திருத்தம் வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று (பிப்ரவரி 10) நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிமன்றத்துக்கு உதவுவதற்காக (Amicus Curiae), மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா நியமிக்கப்பட்டார்.
எம்.பி.க்கள்/எம்.எல்.ஏக்கள் தொடர்பான சுமார் 5000 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறிய மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா,
- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து தீர்ப்பது
- தண்டனை பெற்ற நபரின் தகுதிநீக்க காலத்தை 6 ஆண்டுகள் வரை கட்டுப்படுத்தும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு (8) என இந்த மனு தொடர்பான பிரச்சினைகளை நீதிபதிகளிடம் தொகுத்து வழங்கினார்.
மேலும் அவர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க 2017ல் 10 வெவ்வேறு மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு,
எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை முன்கூட்டியே தீர்த்து வைக்க கண்காணிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியது உள்ளிட்ட உத்தரவுகளை சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, இதன் நிலைமை பரிதாபமாகவே உள்ளது என்று கூறினார்.
அதாவது, இத்தனை உத்தரவுகளுக்கு பிறகும், 42% மக்களவை உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது வெட்கக்கேடானது என்றும், 30 ஆண்டுகளாக இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எங்கு தாமதம்? How Can Convicted Politicians Come Back
அப்போது நீதிபதி தீபங்கர் தத்தா, தீர்ப்பு வழங்குவதில் எந்த இடத்தில் தாமதம் ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா,
சிறப்பு நீதிமன்றங்கள் எம்.பி/எம்.எல்.ஏ விவகாரங்களைத் தவிர மற்ற வழக்குகளை அடிக்கடி எடுத்துக் கொள்கின்றன.
மீண்டும் மீண்டும் வழக்குகள் ஒத்திவைக்கப்படுகின்றன அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதில்லை.
சாட்சிகளுக்கு நீதிமன்றங்களால் சம்மன் பிறப்பிக்கப்பட்டாலும் அது அவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்று காரணங்களை பட்டியலிட்டார்.
கடத்தல், பலாத்காரம், கொலைக் குற்றச்சாட்டுகளுடன் 46-48% பேர் நாடாளுமன்றத்திற்கு வருகிறார்கள் என்று மற்றொரு மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், கிரிமினல் குற்றங்களில் தண்டனை பெற்ற பிறகு, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு அரசியல்வாதிகள் வருவதை எப்படி அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு வழக்கறிஞர் விகாஸ் சிங், “தடை செய்யப்பட வேண்டிய நபர்கள், சட்டம் இயற்றப்படும் நாடாளுமன்றத்தில் ஒரு பகுதியாக இருக்கின்றனர்” என்று பதிலளித்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அரசியலில் குற்றங்கள் அதிகரிப்பது தீவிரமான பிரச்சினை என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் பதிலளிக்க அவகாசம் வழங்கிய நீதிபதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகள் 8 மற்றும் 9 இன் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான விவகாரம் 3 வாரங்களுக்குப் பிறகு பரிசீலனைக்கு பட்டியலிடப்படும் என்றும் கூறினர். How Can Convicted Politicians Come Back