NDTV-க்குள் அதானி நுழைந்தது எப்படி?
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி, எரிவாயு உற்பத்தி, சமையல் எண்ணெய், NDTV என அதானி கால் பதிக்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம்.
கடந்த சில மாதங்களாக அதானியின் பார்வை செய்தி நிறுவனங்கள் மீது பதிந்துள்ளது. கடந்த ஒரு வருடமாகவே அதானி NDTV-ஐ வாங்கவிருப்பதாக தகவல் கசிந்து வந்தது. இதனை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டவட்டமாக மறுத்தது NDTV.
இது நடந்து சரியாக ஒரு ஆண்டுக்குள், NDTVன் பங்குகளை வாங்கியுள்ளது அதானி குழுமம். RRPR என்ற நிறுவனத்துக்கு NDTVல் 29.18 சதவீதம் பங்கு இருக்கிறது.
அதானி குழுமம் இந்த நிறுவனத்தை முழுமையாக வாங்கியதன் மூலம் செய்தி நிறுவனத்தின் பங்குகளும் அதானியின் கீழ் சென்றுள்ளது.
இதோடு நிறுத்திவிடாமல் அதிக அளவிலான பங்குகளை கைப்பற்ற நினைத்துள்ளார் அதானி.
அதாவது கூடுதலாக 26 சதவீதம் பங்குகளை வாங்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒரு பங்குக்கு 294 ரூபாய் என்ற விலையில் வாங்கிக் கொள்வதாக ஆஃபர் அறிவித்துள்ளது அதானி குழுமம்.
பங்குகளை விற்க நிறுவனங்கள் முன்வந்தால், அதானி குழுமத்துக்கு NDTVல் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் கிடைத்துவிடும்.
இதன்மூலம் அந்த செய்தி நிறுவனத்தில் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரம் அதானிக்கு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இதுதொடர்பாக அதானி குழுமம் சார்பாக அறிக்கையும் வெளியாகியுள்ளது. செய்தி நிறுவனத்தில், அதிலும் குறிப்பாக NDTVஐ வாங்குவதற்கு என்ன காரணம் என விளக்கமளித்துள்ளது.
நவீன கால மீடியா மூலம் இந்திய மக்களை மேம்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என்றும், அதனை செயல்படுத்துவதற்கு NDTV தான் சரியான இடம் என்றும் தெரிவித்துள்ளது.
அந்த செய்தி நிறுவனத்தில் தலைமையை வலுப்படுத்துவதும் நோக்கம் என கூறியிருக்கிறது அதானி குழுமம்.
இதற்கு முன்னதாக, கடந்த மே மாதம் the quint செய்தி நிறுவனத்தின் பங்குகளையும் வாங்கியிருந்தது அதானி குழுமம். இதில் 49 சதவீதம் பங்குகள் வாங்கப்பட்டிருந்தது.
ஒரே ஆண்டில் இரண்டு செய்தி நிறுவனங்களுக்குள் கால் பதித்துள்ளது அதானி குழுமம்.
ஆர்.ஜெயப்ரியா