ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளரான ஈரோடு கே.இ. பிரகாஷ் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
சீனியர்கள் பல பேர் இருந்தாலும், ஈரோடு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதால் கொங்கு மண்டல திமுகவுடைய அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார் ஈரோடு பிரகாஷ்.
யார் இந்த பிரகாஷ்?
இந்தக் கேள்விக்கு விரிவாக பதில் காண்பதற்கு முன் ரத்தினச் சுருக்கமாய் திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் மார்ச் 31 ஆம் தேதி ஈரோட்டில் நடந்த தேர்தல் பரப்புரை பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் ஈரோடு பிரகாஷ் பற்றி கூறியதைக் கேட்போம்.
“ஈரோடு பிரகாஷ் சின்ன வயதில் இருந்தே திமுகவில் இணைந்து மக்களுக்காக பணியாற்றுபவர். அவருடைய தந்தை 1977 ஆம் ஆண்டு முதல் கிளைச் செயலாளராக பணியாற்றியவர்.
அப்பாவை பார்த்து அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு கட்சிக்கு வந்தவர். என்னுடைய தலைமையில் ஈரோடு இளைஞரணி மாவட்ட அமைப்பாளராக பணியாற்றியவர் இவர். இப்போது மாநில துணைச் செயலாளராக தம்பி உதயநிதிக்கு துணையாக இருக்கிறார்.
இவர் ஈரோட்டு மக்களுக்கு துணையாக நிற்க நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்க பிரகாஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று பிரகாஷுக்கு அறிமுகம் கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், உதயநிதி இளைஞரணிச் செயலாளராக இருக்கிற நிலையில் மாநில இளைஞரணித் துணைச் செயலாளர், இப்போது ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் என்று உயர்ந்திருக்கும் பிரகாஷின் பின்னணி என்ன?
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி அருகே காகம் கிராமத்தில் கானியம்பாளையம் திமுகவின் கிளைச் செயலாளராக 45 ஆண்டுகள் பணியாற்றியவர் ஈஸ்வர மூர்த்தி. அந்த கிளைச் செயலாளரின் மகன் தான் பிரகாஷ்.
பிறந்து வளர்ந்து விவரம் தெரிந்த நாள் முதலே தனது தந்தையின் கட்சிப் பணிகளை பார்த்தே வளர்ந்தார் பிரகாஷ்.
தந்தையின் வழியே திமுக ரத்தம் பிரகாஷுக்குள்ளும் நிறைந்திருந்தது. அதனால் பள்ளிப் பருவத்திலேயே திமுக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்.
அப்போது திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலினுடைய வலிமையான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இளைஞரணியில் இணைந்தார். அப்போதைய மாசெ என்.கே.கே.பி ராஜாவின் நம்பிக்கைக்குரியவராக கட்சியின் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினார்.
பிரகாஷின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஸ்டாலின் அவரை ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உயர்த்தினார். பத்து ஆண்டுகளுக்கு மேல் இளைஞரணி மாவட்ட அமைப்பாளராக செயல்பட்ட பிரகாஷ், அதையடுத்து இளைஞரணிச் செயலாளராக வந்த உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவராக உருவெடுத்தார்.
பிரகாஷின் திமுக குடும்பப் பின்னணி, அவரது உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை எடைபோட்ட உதயநிதி, இளைஞரணியின் மாநில துணைச் செயலாளராக உயர்த்தினார். கடந்த ஜனவரி மாதம் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்காக 23 குழுக்களை அமைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
அந்த 23 குழுக்களில் மிக முக்கியமானது மாநாட்டு நிதிக் குழு. மாநாடு வெற்றிகரமாக நடப்பதற்கான அடிப்படைக் குழுவான அந்த நிதிக்குழுவுக்கு பொறுப்பாளராக ஈரோடு பிரகாஷைதான் நியமித்தார் உதயநிதி. இதுதான் பிரகாஷ் மீது உதயநிதி வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளம்.
இப்போது அதே நம்பிக்கையோடு ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார் பிரகாஷ்.
கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஆகியோரின் முழு நம்பிக்கையைப் பெற்ற பிரகாஷ் ஈரோடு மாவட்டம் முழுதும் நல்ல அறிமுகம் பெற்றவர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் அவர் உதவி செய்யாத கிராமங்களே இல்லை என்ற அளவுக்கு அனைத்துத் தரப்பினருக்கும் கோயிலுக்கான திருவிழா உதவிகள், தனிப்பட்ட முறையிலான கல்வி உதவி, திருமண விழாக்களுக்கு உதவி என்று பல உதவிகளைச் செய்திருக்கிறார். அந்த அன்பும், நன்றியும்தான் இன்று ஈரோடு பிரகாஷ் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரத்துக்கு செல்லும்போது ஒவ்வொரு கிராமத்திலும் வெளிப்படுகிறது.
இதுவே பிரகாஷுக்கு பிரகாசமான வெற்றியை உறுதிப்படுத்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
Video: சங்கடத்தில் ‘தவித்த’ பிரியாமணி… போனி கபூரை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!
Comments are closed.