சென்னை மெரினாவில் இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியின் போது, ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை சமர்ப்பிக்க உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று (அக்டோபர் 7) உத்தரவிட்டுள்ளார் .
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (அக்டோபர் 6) காலை 11 மணி முதல் மதியம் 1 வரை வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுமார் 15 லட்சம் மக்கள் மெரினாவில் திரண்டனர்.
ஆனால், கடும் கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 நபர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழக அரசு இந்திய விமானப் படை கேட்டுக்கொண்டதிற்கு மேலாகவே வசதிகளை ஏற்பாடு செய்து வைத்திருந்தது. அப்படி இருந்தும் 5 நபர்கள் உயிரிழந்தது வருந்தத்தக்கது. இதை அரசியல் படுத்த வேண்டாம்” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தவெக தலைவர் விஜய் மற்றும் திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், ஈஸ்வரன் உள்ளிட்டவர்களும் திமுக அரசை விமர்சித்திருந்தார்கள்.
இந்த நிலையில், தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமார், டிஜிபி சங்கர் ஜிவாலிடம் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் சங்கர் ஜிவால் அறிக்கை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மெரினா உயிரிழப்பு: விமானப் படை, போலீஸ் இடையே கம்யூனிகேஷன் இல்லை… ஈஸ்வரன் குற்றச்சாட்டு!
ஐந்து பேர் உயிரிழப்பு… தமிழக அரசுக்கு விஜய் வார்னிங்!
விமான நிகழ்ச்சியில் உயிரிழப்பு… ஐந்து லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்