குகேஷ் போன்று இன்னும் பல திறமை வாய்ந்த செஸ் வீரர், வீராங்கனைகளை உருவாக்க தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டுக்கென ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ். சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் இதன் மூலம் இளம் வயதில் (18) உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
இதனையடுத்து கடந்த 16ஆம் தேதி சென்னை திரும்பிய குகேஷுக்கு நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அதற்காக வாலஜா சாலையில் அமைந்துள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்பிருந்து திறந்தவெளி வாகனத்தில் குகேஷ் ஊர்வலமாக கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், உலக சாம்பியன்ஷிப்பில் பெற்ற வெற்றி கோப்பையை வழங்கி குகேஷ் வாழ்த்து பெற்றார். அவருக்கு ரூ.5 கோடியை ஊக்கத் தொகைக்கான காசோலை முதலமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ”18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷை பாராட்டுகிறேன். இன்றைக்கு குகேஷை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்றதும் குகேஷ் கொடுத்த ஒரு பேட்டியைப் படித்தேன்.
அதில் அவர், “விளையாட்டுத் திறமையோடு சேர்ந்து சிறந்த குணம், மன உறுதி ஆகியவையும் இணைந்தால்தான், இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்று அவர் சொல்லி இருந்தார்.
அவர் சொன்ன விளையாடும் திறன், சிறந்த குணம், மனஉறுதி மட்டுமல்ல. எப்போதும் புன்னகையோடு இருக்கும் அவரின் முகமும், விமர்சனங்களை தாங்கும் இயல்பும் தான், அந்த வெற்றிக்கு காரணம்.
12 வயதில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை வென்று, இன்று உலகச் செஸ் சாம்பியன் ஆகிவிட்டார். இதையெல்லாவற்றையும் சாதிக்க குகேஷ் எடுத்துக்கொண்டது, வெறும் 11 ஆண்டுகள்தான்.
இதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கிய பயணம் ஆகியவற்றை நம்முடைய தமிழ்நாட்டு இளைஞர்கள் உத்வேகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குகேஷின் வெற்றி, லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்.
விஸ்வநாதன் ஆனந்த் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டங்கள் பெற்றபோதும் சரி. இப்போது குகேஷ் உலக சாம்பியன் ஆகும்போதும் சரி. அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து, பாராட்டி பெருமைப்படுத்தும் வாய்ப்பு திமுக அரசுக்கு கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்னும் பல திறமை வாய்ந்த செஸ் வீரர், வீராங்கனைகளை வளர்த்தெடுக்கவும், உருவாக்கவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், செஸ் விளையாட்டுக்கென ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
குகேஷின் வெற்றி கொடுக்கும் நம்பிக்கை மற்றும் இந்தச் சிறப்பு அகாடமி ஆகியவற்றால் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன். கொரட்டூரில் பிறந்த குகேஷ் இன்று உலகம் போற்றும் சதுரங்க வீரராக வளர்ந்த வரலாறு மற்ற வீரர்களுக்கும் வழிகாட்டட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: உடலை ஸ்லிம்மாக்க உண்ணாவிரதம் வேண்டாமே!
ஹெல்த் டிப்ஸ்: திடீர் தசைப்பிடிப்பா… இதையெல்லாம் செய்யாதீங்க!
டாப் 10 நியூஸ் : காங்கிரஸ் போராட்டம் முதல் சென்னைக்கு ரெட் அலர்ட் வரை