திமுக அரசு பதவியேற்ற இந்த ஓராண்டில் பொறுப்பான சமூகநல அரசாக மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அதேசமயம் ஒன்றிய பார்ப்பனிய பாஜக அரசு கொடுக்கும் அரசியல், நிதி நெருக்கடியைச் சமாளிக்க அதனுடன் மென்மையான சமரச நடவடிக்கைகளை மேற்கொள்வது விமர்சனத்துக்குள்ளாகிறது.
தமிழகத்தின் ஒன்றியத்துடனான முரணை திராவிட – பார்ப்பனிய அரசியல் முரணாக திமுக அரசு பார்க்கிறது. பார்ப்பனிய எதிர்ப்பைச் சற்று தளர்த்துவதன் மூலம் தீர்க்க இது வெறும் அரசியல் முரணல்ல; சமூக மாற்றத்தை முன்னிறுத்திய உணவு, கல்வி, மருத்துவத்தில் அரச முதலாளித்துவ இருப்பை அடிப்படையாகக் கொண்ட திராவிடப் பொருளாதார மாதிரிக்கும் அனைத்து துறைகளிலும் அரசின் இருப்பை அடியோடு ஒழித்து அதன் சொத்துகளையும் சந்தையையும் தனியாரிடம் தாரைவார்க்கும் ஒன்றியத்தின் பொருளாதாரக் கொள்கைக்குமான முரண். அரசியல் சமரசத்தைத் தவிர்த்து இந்த முரணை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்விக்கான விடையை, நாம் இந்த இடத்துக்கு எப்படி வந்தடைந்தோம் எனப் பார்ப்பதன்மூலம் கண்டடையலாம்.
அன்றைய இரு துருவ உலகம்
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளித்துவம் அதன் வளர்ச்சியின் உச்சமாக உற்பத்தியும் மூலதனமும் ஒரு சிலரிடம் குவிந்து ஏகாதிபத்தியமாக மாற்றமடைந்தது. அதன்பின் உலகத்தை ஒரு குடையின்கீழ் கொண்டுவர உலகப்போர்களில் ஈடுபட்டது. அதன்மூலம் உலகிலுள்ள இயற்கை வளங்களையும் மனித சமூகத்தின் உழைப்பையும் உறிஞ்சி வாழ்வது அதன் நோக்கம். அந்த நோக்கத்தில் வெற்றியும் பெற்று இப்போது செல்வமனைத்தும் ஒரு விழுக்காட்டிடம் குவிந்தும்விட்டது. அப்போது இந்தச் செல்வச் செறிவை முன்னிறுத்திய முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உற்பத்தி சாதனங்களான (Means of production) மூலதனமும் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கும் முக்கிய மூலப்பொருட்களும் தொழிற்துறைகளும் சமூகத்தின் பிரதிநிதியான அரசின் கீழும், அதன்கீழ் சிறு, குறு முதலாளித்துவ உற்பத்தியாளர்கள் இயங்குவது என்ற அரச முதலாளித்துவக் கட்டமைப்பு ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. இதனால் அன்றைய உலகம் உற்பத்தியில் ஏகபோக நிதிமூலதன பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை முன்னிறுத்திய முதலாளித்துவ நாடுகள், உற்பத்தி சாதனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரச முதலாளித்துவத்தை முன்னிறுத்திய சோசலிச நாடுகள் என இரண்டாகப் பிரிந்தன.
பாம்பே திட்டம் கண்முன் நிறுத்தும் அன்றைய பிரிட்டிஷ் இந்தியா
சுதந்திரத்துக்கு முந்தைய பிரிட்டிஷ் இந்தியா 1766 கோடி ரூபாய் வருமானம் கொண்டதாகவும் அதில் விவசாயம், தொழிற்துறை, சேவைத்துறைகள் முறையே 53, 17, 22 (1931-32) விழுக்காடும் பங்களித்திருக்கின்றன. அப்போதிருந்த 5.1 கோடி ஏக்கர் விவசாய நிலம் ரயத்துவாரி, மகல்வாரி, ஜமீன்தாரி முறையில் பெருநிலக்கிழார்களின் கீழும் அவர்களிடம் சிறு விவசாயிகள் குத்தகை முறையில் பெற்று விவசாயம் செய்வதான கட்டமைப்பு. தொழிற்துறையில் பார்ப்பனிய-பனியா-முகலாய தரகு முதலாளிகள் மற்றும் ஆங்கிலேய நிறுவனங்களின் ஆதிக்கம். அப்போதிருந்த 33.81 கோடி (1931) மக்கள் குடும்பத்துக்கு ஐந்து பேர் வீதம் 7.6 கோடி குடும்பங்களாக 1471 (1939) நகரங்களில் ஒரு கோடி குடும்பங்களும் எஞ்சிய 6.6 கோடி குடும்பங்கள் கிராமங்களிலும் (517 பேர் வீதம்) வசித்து வந்திருக்கிறார்கள். இவர்களில் 14.76 கோடி பேர் உழைப்பாளர்களாக (Working population) விவசாயம், தொழிற்துறை, சேவைத்துறை ஆகியவற்றில் (முறையே 10.63 (72%), 2.21 (15%), 1.92 (13%) கோடி) ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் வருமானம் சராசரியாக ஆண்களுக்கு 2-5, பெண்களுக்கு 1-4, குழந்தைகளுக்கு 1-2 அணாக்களாக இருந்திருக்கிறது.
அப்போதைய மக்களில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் 14.6 (1944) விழுக்காடு. அவர்களின் சராசரி ஆயுட்காலம் வெறும் 26-27 வருடங்கள். ஐம்பது விழுக்காடு இறப்பை மகப்பேறு குழந்தைகள்நல காப்பகங்கள் மூலமே தடுத்திட முடியுமென்றாலும் அப்படியான மருத்துவக் கட்டமைப்பின்றி அவ்வளவு மக்கள் இறந்திருக்கிறார்கள். சராசரி தனிநபர் வருமானம் (Per capita income) 51 முதல் 166 ரூபாய்கள் என்று கணக்கீடு சொன்னாலும் நகர்ப்புறங்களில் 2000 ரூபாய்க்கும் மேல் வருமானமுள்ள பத்து விழுக்காட்டிடம் ஐம்பது விழுக்காடு நகர்ப்புற வருமானம் குவிந்திருந்திருக்கிறது. கிராமங்களில் 51 ரூபாய் சராசரி தனிநபர் வருமானம் கொண்டவர்களை காண்பது அரிதானதாக இருந்திருக்கிறது. ஆக அன்றைய இந்தியா, பெரும்பான்மை உழைக்கும் வர்க்கம் உருவாக்கும் செல்வத்தை உறிஞ்சி வாழும் அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்கள், முதல் மூவர்ணத்தைச் சேர்ந்த மன்னர்கள், தரகு முதலாளிகள் மற்றும் நிலவுடைமையாளர்கள் அதற்கு சேவை செய்து வளமான வாழ்வு வாழும் ஆங்கிலேய பார்ப்பனிய நிர்வாகம் இவர்களிடம் எல்லாவற்றையும் இழந்து உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட எந்த அடிப்படைத் தேவைகளும் நிறைவடையாத வெந்ததைத் தின்று பஞ்சத்தில் வாழும் பெரும்பான்மை என்பதாகத்தான் இருந்திருக்கிறது. ஆக, அன்றைய (இன்றும்) உழைக்கும் மக்களின் எதிரி அந்நிய நிதி மூலதன ஏகாதிபத்தியமும் உள்ளூர் நிலவுடைமை – பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியமும்.

காந்தி-காங்கிரஸின் பார்ப்பனிய அரசியல்
நால்வர்ண பார்ப்பனிய இந்துமதத்தை தனது அரசியல் அடிப்படையாகக் கொண்ட காந்தியை புனிதராகவும், மகாத்மாவாகவும், துறவியாகவும், அந்த மதத்தின் குருவாகவும் கட்டமைத்த காங்கிரஸ் அந்த ஆளுமையின்கீழ் அம்மதத்தைச் சேர்ந்த முதல் மூவர்ணத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டிக் கொள்கிறது. மூவர்ணத்தைச் சேர்ந்த தரகு முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் அதன் பொருளாதார அடித்தளமாக விளங்குகிறார்கள். உள்ளூர் பார்ப்பனிய சாதிய ஏற்றத்தாழ்வை ஏறிட்டும் பார்க்காமல் அனைவரும் இந்தியர் என்ற பொது அடையாளத்தை முன்வைத்து அதற்கு எதிரான பொது எதிரியாக அந்நிய ஆங்கிலேயரை கட்டமைத்து மக்களை அணி திரட்டுகிறது காங்கிரஸ். சுதேசி கதர் இயக்கம், உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம் ஆகிய அவர்களின் பொருளாதார நலன்களை பாதிக்கும் போராட்டங்களை முன்னெடுத்து அவர்களின் ஆதிக்கத்தில் இருந்து தரகு முதலாளிகள் மற்றும் நிலவுடைமையாளர்களின் சுதந்திரத்துக்கான அவர்களின் தேவைக்கான ஒருங்கிணைந்த பார்ப்பனிய இந்திய தேசிய விடுதலையைக் கோரியது.
இந்த (பஞ்சத்தில் அடிபட்ட) இந்தியாவுக்கு (1938இல்) வெளிநாடுகளைப் போன்ற தொழிற்புரட்சி வேண்டும் எனவும் இங்கிலாந்தைப் போல படிப்படியாக (Gradual) அல்லாமல் சோவியத்தைப் போன்று வலிந்து முன்னேறுவதுதான் (Forced March) சரியாக இருக்கும் எனவும் பேசுகிறார் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுபாஷ் சந்திர போஸ். உலகப்போருக்குப் பிறகு இந்தியா சுதந்திரமடைவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அதன்பிறகு என்ன மாதிரியான பொருளாதாரத் தொழிற்துறை கட்டமைப்பை ஏற்படுத்துவது என பார்ப்பனிய தரகு முதலாளிகளும் நேருவும் ஒன்றுகூடி விவாதிக்கிறார்கள். அதன்பிறகு 1944இல் பாம்பே திட்டம் (Bombay Plan) வெளியாகிறது. அதனடிப்படையில் எரிபொருள், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் ஆகியவை அரசின் கட்டுப்பாட்டிலும் மற்ற தொழிற்துறைகள் தனியாரின் கட்டுப்பாட்டிலும் செல்கிறது. நிதித்துறை (பணம்) அதாவது மூலதனம் யார் கட்டுப்பாட்டில் இருப்பது என்பதில் நேருவுக்கும் முதலாளிகளுக்கும் முறுகல் ஏற்பட்டு பின்பு முதலாளிகளிடம் காங்கிரஸ் சமரசம் செய்துகொண்டு உள்ளூர், வெளிநாட்டு வங்கிகளிடம் அந்த துறை செல்கிறது.
இதில் மட்டுமல்ல; முன்பு இங்கிலாந்திடம் வரி வருவாயை பகிர்ந்துகொண்ட மன்னர்கள் விடுதலைக்குப் பிறகும் அவர்களின் செலவுக்கான பணம் (Privy purse) பெறவும், நிலவுடைமையாளர்கள் தங்களது நிலங்களை வைத்துக் கொள்ளவும் காங்கிரஸ் உடன்படுகிறது. இறுதியில் நிலவுடைமையாதிக்கம், தனியார் (அந்நிய-தரகு) முதலாளித்துவம், அரச முதலாளித்துவம் என அனைத்தும் கலந்த கலவைப் பொருளாதாரம், அதனை முன்னெடுக்கும் மூவர்ண காங்கிரஸின் அரசியல், நிர்வாகம் என புதிய “சுதந்திர சோசலிச இந்தியக் குடியரசு” உருவாகிறது. இப்படி இரண்டும்கெட்டான் பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்ட இந்தியாவால் அப்போதைய இரு துருவ உலக ஒழுங்கில் எந்தப் பக்கமும் செல்ல முடியாத சூழலில் சார்பிலா (Non alignment) வெளியுறவுக் கொள்கையை வகுத்தளிக்கும் (பின்னாளில் முதலாளிகளுக்காக சண்டைக்கும் செல்லும்) சமாதானப் புறா நேரு இரு துருவத்தையும் ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்தி இந்திய தரகு முதலாளிகளின் மீதான இங்கிலாந்தின் ஆதிக்கத்தைக் குறைக்கும் மிகச்சிறப்பான கொள்கையை உருவாக்கி அவர்களின் சுயசார்பை நிலைநாட்டுகிறார்.

அம்பேத்கர்-பெரியாரின் கலாச்சாரப் புரட்சிகர அரசியல்
வர்க்க விடுதலையையும் சோசலிசத்தையும் முன்னிறுத்திய கம்யூனிஸ்டுகள் கொள்கையளவிலும் பெயரளவிலும் சாதிய, மத, நிலவுடைமை எதிர்ப்பு பேசினாலும் நடைமுறையில் முதலாளித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பையே முதன்மையாகக்கொண்டு செயல்படுகிறார்கள். அது அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு காங்கிரஸுடன் இயல்பாக இணக்கம் காண வைத்து காங்கிரஸின் நோக்கமான முதல் மூவர்ணத்தின் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது. இந்தப் போராட்டத்தின் இறுதியில் பார்ப்பனிய காங்கிரஸில் பகுதியளவு கரைந்து போகவும் வைக்கிறது. அடிப்படையில் இடதுகளின் நிலைப்பாடு இந்தியாவில் ஜனநாயகப் புரட்சி வேண்டும் என்பது. இது என்ன விதமான ஜனநாயகம் என்பதில் இவர்களுக்குள் இருக்கும் வேறுபாடு. சாதிய ஏற்றத்தாழ்வே இங்கே சமூக கட்டமைப்பாக இருக்கும் நிலையில் இதில் சமத்துவத்தை ஏற்படுத்தி சகோதர(ரி)தத்துவத்தை ஏற்படுத்துவதே இங்கே ஜனநாயகமாகவும் சுதந்திரமாகவும் இருக்க முடியும்.
அப்படியான சாதிய சமத்துவத்தை முன்னிறுத்திய சமூக நீதியை முன்னெடுக்கிறார்கள் அம்பேத்கரும் பெரியாரும். அந்த நோக்கத்தை அடைய தடையாக நிற்கும் பார்ப்பனிய இந்து மதத்தை அடித்து நொறுக்குகிறார்கள். இருக்கும் சாதிய சமூகத்தை மாற்றி இன்னொரு புதிய சமூகத்தைப் படைக்க முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி உண்மையில் ஒரு கலாச்சாரப் புரட்சி; இந்திய சாதிய சூழலில் வர்க்கப் புரட்சி ஏற்படுவதற்கு முந்தைய இன்றியமையாத் தேவை. பின்தங்கிய சீன சமூகத்தில் அரசியல் புரட்சியைச் சாதித்து, பின்பு கலாச்சாரப் புரட்சியின் இன்றியமையாமையை உணர்ந்து அதை முன்னெடுத்த மாவோவை ஏற்றுக்கொண்ட இந்திய கம்யூனிஸ்டுகள் மாவோவுக்கும் முன்னோடியான இந்த இருவரையும் அவர்கள் வாழ்ந்த காலம் வரையிலும் ஏறிட்டும் பார்க்காதது ஏனென்று ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.
இந்த சாதிய சமூகத்தை மாற்றியமைக்க வேண்டுமானால் நிலவுடைமையை உடைக்க வேண்டும்; அப்படி நிலவுடைமையை உடைக்க வேண்டுமானால் சாதிய ஏற்றத்தாழ்வை விட்டு மக்கள் சமமாக இணைய வேண்டும். ஒன்றுக்கொன்று முரணான இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க சாத்தியமில்லை. அதற்கு முந்தைய ஏற்பாடாக இதைச் சரிசெய்யும் சமூகச் சீர்திருத்த கோரிக்கை இங்கே ஒரு வரலாற்றுத் தேவை. அப்படியான சீர்திருத்த சமூகநீதி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை அம்பேத்கரும் பெரியாரும் முன்னெடுத்து அந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றுகிறார்கள். இந்த சாதிய சமூகத்துக்கான சமத்துவ சமூகநீதியை உருவாக்க சாதாரணர்களின் ஏற்றத்தாழ்வான சாதிய மதிப்பீடுகள் தடையாக நிற்கின்றன. அதைத் தகர்க்க தனிநபர் ஒழுக்க நெறிமுறையாக பௌத்தத்தை முன்மொழிகிறார்அம்பேத்கர்; கடவுள் மறுப்பு, பகுத்தறிவை முன்வைத்து தனக்கு சமமாக எல்லோரையும் சாதிய, பாலின பேதமின்றி பார்க்க வைக்கும் சுயமரியாதை இயக்கம் காண்கிறார் பெரியார்.

பெரியாரின் தமிழ்த்தேசிய சறுக்கல்
இந்த நோக்கத்துக்கு இசைவாக இருவரும் அந்நிய ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டு உள்ளூர் பார்ப்பனியத்துடன் முரண்படுகிறார்கள். சமூக மாற்றத்துக்குத் தேவையான பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலை சரியாக முன்னெடுத்தாலும் அதை சாதிக்கும் பொருளாதாரக் கோரிக்கையை இருவரும் முன்வைக்காதது மட்டுமல்ல; அது கோரும் நிலவுடைமை எதிர்ப்புக்கு மாறாக அவர்களுடன் சமரசமாகவும் செல்கிறார்கள். அந்நிய ஏகாதிபத்தியம் வெளியேறும் நிலையில் உள்ளூர் பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்க்க நால்வர்ண தெளிவற்ற தெற்கின் பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களை திராவிடர்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் மூலம் இணைத்து அவர்களுக்கு எதிரான பொதுவான எதிரியாக பார்ப்பனியத்தைக் கட்டமைக்கிறார் பெரியார். இது தமிழகத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் இருக்கும் பொது எதிரியான பார்ப்பனியத்துக்கும் எதிரான முரணற்ற முன்னெடுப்பு. அதேசமயம் தமிழக நிலவுடைமையுடனும் சமரசத்தைத் தொடர்கிறார். தமிழகத்துக்கு வெளியில் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவில்லாத நிலையில் தனித் தமிழ்நாடு கோரிக்கையைக் கையில் எடுக்கிறார். இது ஒடுக்கப்படும் மக்களுக்கான உள்-வெளி பார்ப்பனிய முரணை எதிர்கொள்ளும் ஒருங்கிணைந்த கோரிக்கை அல்ல; அடிப்படையில் இது ஒன்றிய பார்ப்பனிய ஆதிக்கத்தில் இருந்து தமிழக நிலவுடைமையாளர்களை விடுவிக்கும் நிலவுடைமையாளர்களுக்கான விடுதலை கோரிக்கை.
ஆயுதம் தரித்து போராடிய தெலங்கானா போன்ற பகுதிகளே ஒன்றியத்தினால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் அவ்வாறான ஆயுதப் போராட்டத்துக்கு எதிரான பெரியார் இந்த தனித் தமிழ்நாடு கோரிக்கையை சாதிய சமத்துவத்தை ஏற்படுத்தாமல் தமிழ்நாட்டில் தனித்து நின்று சாதிப்பது சாத்தியமில்லாது. இந்த நிலையில் மக்கள் திரள் பாதையில் பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கான தனது திராவிட அரசியலை சர்வ தேசியத்தின் பாதையில் இந்தியா முழுக்க எடுத்துச் சென்று அனைத்து திராவிட தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டமாக கட்டமைக்க முனைந்திருக்க வேண்டும். மற்ற திராவிட தேசிய இனங்களோடு இணைந்து ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தி அவர்களின் ஆதரவுடன் பார்ப்பனியத்திடமிருந்து தமிழ் தேசிய இன மக்கள் விடுதலையை அடையும் நடைமுறை சாத்தியமான பாதைக்கு மாறியிருக்க வேண்டும். பார்ப்பனிய சமூக கட்டமைப்பின் பொருளாதார அடித்தளமான அனைத்து நிலவுடைமை ஆற்றல்களுக்கும் எதிரான சமரசமற்ற போராட்டமாக செழுமைப்படுத்தி இருக்க வேண்டும். மாறாக பிற்போக்கான நிலவுடைமை தேசியத்தை அவர் கையில் எடுத்து அதுவரையிலான அவரின் முற்போக்கு அரசியல் பாதையில் முதன்முறையாகப் பின்னோக்கி ஓரடியெடுத்து வைக்கிறார்.
கம்யூனிஸ்டுகளின் புரட்சிகர ஆளும்வர்க்க கலவைச் சேவை
ஏகாதிபத்தியம் பின்வாங்கி அந்த இடத்தில் இந்திய ஒன்றிய பார்ப்பனிய ஆதிக்கம் வரப்போவதை முன்னுணர்ந்து அதிலிருந்து தமிழகத்தைக் காக்கும் விதமான அந்தச் சூழலுக்கான தனிநாடு கோரிக்கையை முன்வைத்து உள்ளூர் நிலவுடைமையுடன் சமரசம் செய்துகொண்ட பெரியாரின் அன்றைய அரசியல் உத்தி (Tactical move) மிகச் சரியானதாகவும் இருந்திருக்கலாம். ஆனால், அன்றைய சமூகப் பொருளாதார சூழலைக் கணக்கில் கொள்ளாமல் முன்வைக்கப்பட்ட இந்தப் பொருத்தமற்ற கோரிக்கை சரியானதாகவே இருந்தாலும் தோல்வியை தழுவுவது தவிர்க்கவியலாதது மட்டுமல்ல; எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தவல்லது. கம்யூனிஸ்டுகளின் பார்ப்பனிய எதிர்ப்பற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் பார்ப்பனிய-பனியா, நிலவுடைமையாளர்களின் கட்சியான காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முற்பட்டது. அது பார்ப்பனியத்தை அரியணையில் ஏற்றி கம்யூனிஸ்டுகள் பார்ப்பனியத்தில் பகுதியளவு கரைவதில்போய் முடிந்தது.
சுதந்திரத்துக்கு பிந்தைய நக்சல்பாரி கம்யூனிஸ்டுகளின் “உழுபவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம்” என்ற முழக்கத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களை புரட்சி செய்ய அழைக்கிறார்கள். அதுவரையிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்ற நிலவுடைமையாளர்களுக்கு எதிரான போராட்டம் அப்போது ஒருங்கிணைந்த அரசியல் வடிவம் பெறுகிறது. இது இருக்கும் சாதிய சமூக அமைப்பைத் தகர்த்து புதிய சமூகத்தைப் படைக்கும் புரட்சிகரப் பொருளாதார அடிப்படையைக் கொண்டது என்றாலும் அதை அடைய அனைவரும் உழைக்கும் வர்க்கமாக வாருங்கள் எனும் இந்தியாவுக்குப் பொருந்தாத வர்க்க அரசியலை முன்வைக்கிறார்கள். ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ பொருளாதார வளர்ச்சியின் போக்கில் தமது நிலங்களை இழக்கும் மக்களை மதத்தின் வழியாக ஒத்த கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை கட்டமைத்து நிலப்பிரபுக்களுக்கான தேசியம் அங்கே உருவானது. மக்கள் உழைக்கும் வர்க்கமாக ஒன்றாகிறார்கள். இங்கே பார்ப்பனியம் நிலமனைத்தும் மன்னனுக்கு சொந்தம் என்ற வல்லாட்சி கட்டமைப்பை (Despotic) உருவாக்கி அதை நிலைநிறுத்த மக்களைப் பிளவுபடுத்தி சாதிய ஏணிப்படியில் அடுக்கியது. வர்க்கமாக இணைவதற்கு சாத்தியமற்ற ஏற்றத்தாழ்வான சாதிய இனக்குழு சமூகத்தை உருவாக்கியது. நிலவுடைமைக்கும் பார்ப்பனியத்துக்குமான இந்த உற்பத்தி உறவை அன்றைய மூவர்ணத்தால் நிரம்பியிருந்த கம்யூனிச கட்சித் தலைமைகளால் காண முடியவில்லை. அவர்களுக்குள் குடிகொண்டிருந்த பார்ப்பனியம் இதை வெறும் கலாச்சாரக் கூறாக காணவைத்து புறம்தள்ள வைத்துவிட்டது.
அன்றைய யதார்த்த சூழலில் இருந்து மக்களை அணுகிய அம்பேத்கரும் பெரியாரும் இந்த சாதிய சமூக கட்டமைப்பை உடைக்காமல் எதையும் சாதிக்க முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறார்கள்; அனைத்து இந்துமத அடிப்படைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்; சாத்தியமான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி அதை உடைக்க முனைகிறார்கள். ஏகாதிபத்திய நேரடி ஆதிக்கம் முடிவுக்கு வந்த பின்னர் நிலவுடைமைகளுக்கு எதிராக நிலச்சீர்திருத்த வர்க்க அரசியலைக் கையிலெடுத்த நக்சல்பாரிகள் அதை சாதிக்க அடிப்படைத் தேவையான சாதிய-பார்ப்பனிய கலாச்சார களையெடுப்பைச் செய்யாமல் தனி நபர்களை அழிக்கும் களையெடுப்பைச் செய்யக் கிளம்புகிறார்கள். மக்களை ஒருங்கிணைக்கத் தவறி சிதறுகிறார்கள். திக்குதெரியாமல் ஆயுதப் போராட்ட சாகச வாதத்தில் மூழ்கி அரசு அடக்குமுறைக்கு உள்ளாகி அடையாளம் தெரியாமல் போகிறார்கள்.
இவர்களைப் போலவே சிதறிக்கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களும் தமது கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடிப் பெறும் வலிமையற்று வாழ்கிறார்கள். இந்துத்துவத்தை முன்வைத்து முதல் மூவர்ண மக்களை அரசியல் ரீதியாகத் திரட்டி பார்ப்பனிய-பனியா பொருளாதார பின்புலத்தோடு இந்தியா முழுக்க தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்கிறது பார்ப்பனியம். கம்யூனிஸ்டுகளின் பார்ப்பனிய எதிர்ப்பற்ற நிலவுடைமை எதிர்ப்பு அரசியல் இந்தியா முழுக்க பார்ப்பனியம் வலுப்பெறவும் ஆளும் வர்க்கத்துக்கு சாதகமாகவும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் சென்று எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது. இவர்களின் நிலவுடைமை எதிர்ப்போடு பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பும் இணைந்த தமிழ்நாட்டில் முற்றிலும் வேறான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பெரியாரின் முரண் அரசியலால் தோன்றிய திமுக
இந்திய பார்ப்பனியத்தின் அங்கமான தமிழக பார்ப்பனர்களின் அரசியல், நிர்வாக, காங்கிரஸ் கட்சியில் கொண்டிருந்த ஆதிக்கம் இவர்களின் முன்னாள் எஜமானர்களான தமிழக நிலவுடைமையாளர்களை (பார்ப்பனியமயமாகியே இருந்தாலும்) அவர்களுக்கு எதிராகப் போராட நிர்பந்திக்கிறது. பார்ப்பனியத்துக்கு எதிரான பெரியாரிடமும் சேர முடியாத அவர்கள் தனியாக நீதிக்கட்சியாக இயங்குகிறார்கள். இவர்களின் கல்விக் கோரிக்கை அடிப்படையில் தமிழக ஆதிக்க சாதிகளின் கோரிக்கை. பார்ப்பனர்கள் கோலோச்சிய ஆட்சி, நிர்வாகத்தை உடைத்து இவர்களைப் பதிலீடு செய்வதற்கான முயற்சி. சமூக சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமத்துவத்துக்கான பெரியாரின் போராட்டம் இடைநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒருசேர ஈர்க்கிறது. நிலவுடைமையாளர்களின் நீதிக்கட்சியிடம் பொருளாதார வலுவிருந்தாலும் மக்கள் ஆதரவு அரசியல் அடித்தளமின்றிப் போகிறது. அது நிலவுடைமையுடன் நெகிழ்வாக நடந்துகொள்ளும் பெரியாருடன் அவர்களை இணைய வைக்கிறது.
அவரின் பார்ப்பனிய, காங்கிரஸ் எதிர்ப்பு அவர்களுக்கு உவப்பாக இருந்தாலும் ஆட்சியில் பங்கெடுத்து அனுகூலம் அடையாமல் “சமூக மாற்றமே முதன்மையானது” என்ற அவரின் இயக்க அரசியல் உறுதி, தனிநாடு கோரிக்கை ஆகியவை அன்று நிலவிய பார்ப்பனர்களின் அரசியல் ஆதிக்கத்தை உடைத்து அனுகூலம் அடைய துடித்த நிலவுடைமையாளர்களை மாற்றை நோக்கி நகர்த்துகிறது. ஆயுத பலம் கொண்ட எதிரியுடன் ஆயுதப் போராட்டத்தை தவிர்த்த வழியில் போராடி தனிநாடு கோரிக்கையை சாதிப்பது சாத்தியமற்றது. அதேபோல நிலவுடைமையாளர்கள் பார்ப்பனர்களுடன் முரண்பட்டார்களே ஒழிய, பார்ப்பனியத்துடன் அவர்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. உண்மையில் அதுதான் அவர்களின் செல்வச் செழிப்புக்கும் இருப்புக்கும் அடிப்படையானது. அவர்களை ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து ஒன்றிய பார்ப்பனியத்துக்கு எதிராக போராடி தனிநாடு பெற அழைத்தார் பெரியார். பெரியாரின் இந்த முரணான நடைமுறை சாத்தியமில்லாத அரசியல் திராவிடர் கழகத்தை உடைத்து அண்ணாவின் தலைமையில் திமுகவை உருவாக்குகிறது.

திமுகவின் அடையாள சமரச சுயசார்பு அரசியல்
அன்றைய தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திராவிட கறுப்பையும் கம்யூனிச சிவப்பையும் தனது கட்சியின் அடையாளமாக்குகிறது திமுக. ஆங்கிலேயர் நேரடி ஆதிக்கம் மறைந்து ஒன்றிய பார்ப்பனியத்தின் கையோங்கிய நிலையில் பெரியாரின் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்ற அரசியல் கருத்தாடலுக்குப் பதிலாக தெற்குக்கு எதிரான வடக்கு என்ற அரசியல் சொல்லாடலைக் கொண்டுவருகிறது. இதன்மூலம் ஒன்றிய பார்ப்பனியத்தை பொது எதிரியாகக் கட்டமைத்து உள்ளூர் பார்ப்பனியத்தையும் நிலவுடைமையையும் மறைமுகமாக தப்பிக்க வைத்து தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. ஆங்கிலேய பொது எதிரிக்கு எதிராக சாதி, மதம், இனம், மொழி கடந்து இந்தியராக மக்களை ஒருங்கிணைக்க முயன்ற காங்கிரஸைப் போல ஒன்றிய பார்ப்பனிய பொது எதிரிக்கு எதிராக தமிழர்கள் என்ற ஒற்றை தேசிய இன அடையாளத்தின்வழி மக்களைத் தன் பின்னால் அணிவகுக்கச் செய்கிறது. பின்பு திமுகவின் அரசியல் இருப்பை ஒன்றிய பார்ப்பனியம் கேள்விக்குள்ளாக்க முனைய திராவிட நாடு கோரிக்கையை சுயாட்சிக் கோரிக்கையாக மாற்றி அவர்களுடன் சற்று இறங்கிப் போகிறது.
அதைத் தொடர்ந்து இந்தியைத் திணிக்க அவர்கள் எத்தனிக்கிறார்கள். அது திமுகவின் வடக்கு-தெற்கு அரசியலுக்கு தார்மிக பலத்தை வழங்கி வலுப்படுத்தியதோடு அதற்கு எதிரான திமுகவின் வலுவான போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்ததைப்போல மக்களை தமிழர்களாக ஒன்றிணைத்து திமுகவின் பின்னால் நிற்க வைக்கிறது. சுதந்திர இந்தியாவில் அந்நிய, தரகு முதலாளிகள், மன்னர்கள், நிலவுடைமையாளர்கள் என ஆளும்வர்க்கம் கோரிய அனைத்தையும் கொடுத்துவிட்ட பிறகு காங்கிரஸால் சாமானியர்களின் முன்னால் வாய்நிறைய சோசலிச வடை மட்டுமே சுடமுடிந்தது. அதனால் நாடெங்கும் வறுமை சூழ்ந்து ஏமாற்றமடைந்த மக்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள். நடைமுறை சாத்தியமான தீர்வை முன்வைத்து மக்களை அணிதிரட்டிப் போராடி அவர்களை ஜனநாயகப்படுத்துவதற்குப் பதிலாக சேகுவேராவைப்போல துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு தோழர்கள் சாகசப் பயணம் கிளம்பி மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு அரச அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். இந்த வறுமை சூழ்ந்த கொந்தளிப்பான சூழலில் தமிழின மொழி உரிமையை முன்னிறுத்திப் போராடி மக்களைத் திரட்டி இருந்த திமுக அப்போதைய வறுமைக்கு முகம்கொடுக்கும் விதமாக “அனைவருக்கும் மலிவு விலையில் அரிசி கொடுப்போம்” என வாக்குறுதி கொடுத்து மக்களின் பெருவாரியான ஆதரவில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்கிறது.
அன்றைய இக்கட்டான சூழலை சாதுர்யமாக கையாண்டு தமிழர்களாக மக்களை ஒருங்கிணைத்து ஆட்சியைப் பிடித்தாலும் வெறும் தமிழர் கோசத்தை வைத்துக்கொண்டு ஆட்சியில் நீடித்து நிலைத்திருக்க முடியாது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி ஆட்சியில் நீடித்து நிலைத்திருக்க திமுக அரசு என்ன செய்தது? அதன் வளர்ச்சியும் தொடர்ச்சியும் எப்படி இன்றைய பொருளாதாரக் கொள்கை முரணாக வளர்ந்தது?
அடுத்த கட்டுரையில் நாளை தொடரும் …
கட்டுரையாளர் குறிப்பு

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
சிறப்புக் கட்டுரை: தமிழ் ஆராய்ச்சி மன்றத்திலும் எழுத்துப் பிழையா?