நிலம் கொடுத்தவர்களுக்குத் தற்காலிக பணி… வட மாநிலத்தவருக்கு நிரந்தர பணியா? என்.எல்.சி குறித்து பன்னீர்

அரசியல்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பணியமர்த்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனம் பட்டதாரி பொறியாளர்கள் 299 பேரைத் தேர்வு செய்தது. இதில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் தேர்வான வட மாநிலத்தவருக்குப் பதிலாகத் தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களான வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர்.

சொந்த மாநில மக்களுக்கு 75% வேலை

இந்நிலையில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம், “ஆந்திரப் பிரதேசம், அரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ளூர் மக்களை 75 சதவிகிதம் தனியார் துறையில் பணியமர்த்த வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பொறியாளர்களை நியமித்து இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைய, நிலம் கொடுத்த உள்ளூர் மக்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகப் பணியாளர்களாக நியமிப்பதும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களை, நிரந்தரப் பணியாளர்களாக நியமிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. தமிழ் மண்ணில் பொறியியல் பட்டம் பெற்று திறமையான மாணவர்கள் இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டை முற்றிலுமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் புறக்கணித்து இருப்பது நியாயமற்ற செயல்.


திமுக குரல் எழுப்பாதது வேதனை

தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில், 75 சதவிகிதம் வேலைவாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கப்படச் சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக. பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒரு பொறியாளர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லாதது குறித்து உரத்த குரல் எழுப்பாதது வேதனை அளிக்கிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

தமிழக முதலமைச்சர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, குறைந்தபட்சம் தமிழகத்தைச் சேர்ந்த 75 விழுக்காடு பொறியாளர்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளர்களாக நியமிக்கப்படத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்

அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடக்குமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0