திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று (பிப்ரவரி 4) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இரு தரப்பிலும் போராட்டங்கள் நடந்தன.
அதன் தொடர்ச்சியாக ‘திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்’ என்ற கோரிக்கையுடன் பிப்ரவரி 4 (இன்று) மாலை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி கட்சி அறிவித்தது.
இதனையடுத்து மதுரையில் நேற்றும், இன்றும் என 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்ட எல்லையிலும், திருப்பரங்குன்ற பகுதியிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று ஒரு நாள் திருப்பரங்குன்றம் மலை கோவில் மற்றும் தர்காவிற்கு சென்று வழிபட பக்தர்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று இரவு முதல் இந்து முன்னணி கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் கற்பகவடிவேல் மற்றும் நிர்வாகி செந்தில்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பையா உட்பட 8 பேரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலில் வைத்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து இன்று காலை போராட்டத்திற்கு புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது ஒரு ஆதரவாளர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று மதுரை வந்துகொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் மாநில நிர்வாகி வன்னிராஜனை விருதுநகரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.