இன்னொரு மொழிப் போரை திணிக்காதீர் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசியல்

கட்டாயமாக இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்பம் மற்றும் கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்யப்பட்ட தொகுப்பில் இந்த பரிந்துரை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “
ஒரே நாடு என்ற பெயரில் ’ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாச்சாரம் என நிறுவிட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து செயல்படுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்க கூடியதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு கடந்த மாதம் அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி உள்ள அவர்,

“இந்தி பேசும் மாநிலங்கள் எனும் ஏ பிரிவு மாநிலங்களில் இதனை முழுமையாக செயல்படுத்தி ஓரளவு இந்தி பேசும் மாநிலங்களிலும் இதனை தொடர்வதுடன் இந்தியா முழுமைக்கும் இந்தியை பொது மொழியாக்கிட வேண்டும் என்கிற பரிந்துரையும் இதில் அடங்கியுள்ளது.

இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

hindi language mk stalin statement amitsha

இந்தியை பயிற்றுவிப்பதற்கான பணியிடங்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக இருந்தால் அந்த கல்வி நிறுவனத்தின் தலைவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அச்சுறுத்தல் தொனியில் பரிந்துரைகள் அமைந்துள்ளன.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையை கொண்ட மொழிகள்.

இன்னும் சில மொழிகளையும் இந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் என அந்தந்த மொழிகளை பேசுவோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தி மொழியை மட்டும் பொது மொழியாக அமைச்சர்களின் தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ அவசியமோ எங்கிருந்து வந்தது?.

ஒன்றிய அரசு பணிக்கான போட்டி தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்திய முதன்மைப்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்?

இந்தி படித்தால் மட்டுமே வேலை. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள மாநிலங்களிலும் இந்தியை கட்டாயமாக்குவது, அதிகாரிகளோ, அலுவலர்களோ இந்தி மொழியை பயன்படுத்தாவிட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பது என்பவை உள்ளிட்ட மேலும் சில பரிந்துரைகளும் ஒன்றிய உள்துறை அமைச்சர் தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

பாரத் மாதா கீ ஜே என்று நாடாளுமன்ற அவையில் அதனை ஒரு அரசியல் கோஷமாக்கி குரல் எழுப்பிக் கொண்டே இந்திக்குத் தாய்ப்பாலும் இந்தியாவின் மற்று மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கையை விட, மற்ற மொழிகளை பேசும் மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகம்.
ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சிறப்பு இருக்கிறது. தனித்துவம் இருக்கிறது. மொழிவழி பண்பாடு இருக்கிறது.

அந்த தனித்துவமான பண்பாட்டு சிறப்பை பாதுகாக்கவும் இந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளை காப்பதற்குமான வேலியாகத்தான் ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி ஒன்றிய அரசின் இணை அலுவல் மொழியாக நீடிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் 1957 ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு சென்ற போது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கான உரிமையையும் பாதுகாப்பையும் வலியுறுத்தி குரல் கொடுத்தது.

அதில் உள்ள நியாயத்தை ஏற்றுத்தான் அன்றைய பிரதமர் நேரு அவர்கள் ஜனநாயக சிந்தனையுடன் இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் வகையிலும் இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் நீடிக்கும் என்கிற உறுதி மொழியை வழங்கினார்.

அந்த உறுதிமொழிக்கு மாறாக ஆதிக்க இந்தியை திணிக்க முற்பட்ட போது அதனை எதிர்த்து 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கிளர்ந்து எழுந்த மொழிப்போரில் தமிழ் மொழியாம் தமிழைக் காக்க தீக்குளித்தும், துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் ஏந்தியும் உயர் தியாகம் செய்த தீரமிகு இளைஞர்களின் வரலாற்றை மறந்து விட வேண்டாம்.

அதன் தொடர்ச்சியாக 1968, 1976 ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதன் அடிப்படையிலான விதிகளின்படி ஒன்றிய அரசு பணிகளில் ஆங்கிலம் இந்தி என இரு மொழிகளையும் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் அறிவியல் வளர்ச்சியையும், தொழில்நுட்ப வசதிகளையும் கவனத்தில் கொண்டு எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக்குவதே ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதை விடுத்து அரசியல் சட்டத்தை மதிக்காமல் இந்தியை திணிக்கும் முயற்சிகளை பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இந்தி திவாஸ் கடைபிடிக்கப்பட்டபோது ஒன்றிய உள்துறை அமைச்சர் இந்தி தான் அலுவல் மொழி என்றார்.

இப்போது அவர் தலைமையிலான குழு இந்தியை பொதுமொழி என்றும் கல்வி நிலையங்களில் பயிற்று மொழி என்றும் கட்டாயமாக திணிப்பதற்கான பரிந்துரையை முன் வைத்துள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் அலுவலர்கள் தொடங்கி மாணவர்கள் வரை இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம்.

நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றை கட்டாயமாக முயல்வது, இந்திக்காரர்கள் மட்டுமே இந்திய குடிமக்கள் என்பது போலவும் இந்தியாவின் மற்ற மொழிகளை பேசுவோர் இரண்டாம் தர குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையை கொண்டது. இதனை தமிழ்நாடு மட்டுமல்ல எங்களின் அண்டை மாநிலங்கள் உட்பட அவரவர் தாய் மொழியை போற்றும் எந்த மாநிலத்தவரும் ஏற்க மாட்டார்கள்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.
அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்.

எங்கள் தாய்மொழி உணர்வு என்னும் நெருப்பை உரசி பார்த்திட வேண்டாம் இந்தியை கட்டாயமாக்குவதை கைவிட்டு இந்திய ஒற்றுமை சுடரை காத்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரியா

அலறிய அத்வானி… கதறிய கரசேவகர்கள் : யார் இந்த முலாயம் சிங்?

சட்டத்தை மீறினார்களா நயன் விக்கி தம்பதி ?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

1 thought on “இன்னொரு மொழிப் போரை திணிக்காதீர் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

  1. All non hindi speaking states should join together and oppose Hindi imposition on them directly or indirectly by Modi Sircar to safeguard the interests of future generations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *