திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதனை திசை திருப்பவே முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மொழி நாடகத்தை அரங்கேற்றுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக் கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்பம், மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது.
இதற்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. அன்புமணி ராமதாஸ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, இந்தியைக் கட்டாயமாக புகுத்தி, இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர்கள் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
முதல்வர் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
“எப்போதெல்லாம் திமுகவின் மீது மக்களுக்கு அதிருப்தி அலை வீசுகிறதோ, எப்போதெல்லாம் ஊடகங்கள்கூட திமுகவுக்கு எதிராக பேசத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் மொழி பிரச்சினையை எழுப்புவது திமுகவின் திராவிட மாடல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (அக்டோபர் 10) அவர் வெளியிட்ட அறிக்கையில், “முதல்வரின் தமிழ்மொழி மீதான இந்த திடீர் கரிசனத்தை எண்ணி சிரிப்பதா…? அழுவதா..? என்றே தெரியவில்லை.
1957ஆம் ஆண்டில் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டு, ஒரு சில இடங்களை வென்ற திமுகதான் தமிழை உலகம் தோன்றிய காலத்திலிருந்து காப்பாற்றி வந்திருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை முதல்வர் ஸ்டாலின் உருவாக்க நினைப்பது நகைப்புக்கிடமாக இருக்கிறது.
1957 வரை தமிழ் எப்படி அழியாமல் இருந்ததோ, அதுபோலத் தமிழ் மொழி தன்னைத் தானே காத்துக் கொள்ளும், கவலைப்பட வேண்டாம். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழி, திமுகவை மட்டும் நம்பியிருப்பதாக நினைக்க வேண்டாம்.
1967இல் இருந்து தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் மாறி மாறி இருக்கும் திமுக , தமிழ் மொழிக்காக என்ன செய்திருக்கிறது?.

ஒரு வார்த்தைகூட படிக்கத் தெரியாத, தமிழ் எழுதத் தெரியாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழில் பேசுவது அவமானம் என்று நினைக்கும் ஒரு தமிழ் சமுதாயத்தைப் படைத்திருக்கிறது.
மற்ற மாநிலங்களில் எல்லாம் தாய் மொழியைப் படிக்காமல் எவரும் பள்ளிக் கல்வியை முடிக்க முடியாது.
ஆனால், திராவிட மாடலில் மட்டும்தான் இனிய தமிழ் மொழியை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, இந்தி உள்பட மற்ற மொழிகளைப் படித்துக்கொண்டு கல்லூரி வரைக்கும் முடிக்கும் வாய்ப்பை உருவாக்கியது திமுக.
மோடியும் தமிழும்
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பிரதமர் மோடியால் ஏற்படுத்தப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலம், தமிழ் கட்டாயப் பாடமாக மாற்றப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழையே படிக்காமல் தமிழக பள்ளிகளில் படிக்க முடிந்த இழிவான சூழ்நிலையை மாற்றி, தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக மட்டுமல்ல, பயிற்று மொழியாகவும் அமைத்துத் தந்த பிரதமர் மோடிக்குத் தமிழகம் என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாதது போலவும், தமிழுக்கு மட்டும்தான் தனிப் பெரும் ஆபத்து திடீரென வந்துவிட்டது போலவும், ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, மக்கள் இன்னமும் அறியாமையில்தான் இருக்கிறார்கள் என்று அசட்டு நம்பிக்கையில் இருப்பதை உணர்த்துகிறது, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை.
திமுக ஆட்சி மீதான அதிருப்தியிலிருந்து மக்களையும், ஊடகங்களையும் திசைதிருப்பவே மீண்டும் மொழிப் போர் என்னும் நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள முயல்கிறார்.
நீங்கள் முதல்வராக இருக்கும் இந்த காலத்தில் தான் மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழர்களின் அடையாளமாகிய எங்கள் திருக்கோயில்களையும், எங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழியையும் மக்களாகிய நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம்.
தயவுசெய்து, கவலைக்கிடமாக இருக்கும், தங்கள் ஆட்சியையும், தமிழ் நாட்டையும், கொஞ்சம் கவனியுங்கள்” என விமர்சித்துள்ளார்.
பிரியா
ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
மாணவர் தாலி கட்டிய வீடியோ: வெளியிட்டவர் கைது!
சிரிக்கவும் அழவும் வேண்டாம், மக்களுக்கு எத படிக்கணும் என்பது தெரியும். மதத்தை வைத்து அரசியல் பண்ணுவது பிணம் தின்னுவதற்கு சமம்
சிறப்பான பதிலடி