இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் நாளை (நவம்பர் 12) நடைபெற உள்ளது.
68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 35 இடங்கள். இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி. இவர்களுடன் இம்முறை ஆம் ஆத்மியும் களமிறங்கி இருக்கிறது.
இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் ஆளும் பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என தெரிவித்துள்ளன.
ஒரு சில ஊடகங்கள் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று கருத்து தெரிவித்துள்ளன.
அதே நேரம் இமாச்சலப் பிரதேச தேர்தல் வரலாற்றை பொறுத்தவரை மாநிலத்தை ஆளும் கட்சிகள் மீண்டும் தேர்தலில் வென்றதாக சரித்திரம் இல்லை.
ஒருமுறை ஆளும் கட்சி வென்றால் அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி வெல்வது வாடிக்கை.
இதனால் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை எப்படியும் வீழ்த்தி விடலாம் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது.
அதனால் என்னவோ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு பக்கம், பிரதமர் மோடி மீதான மதிப்பு, மத்திய பாஜக அரசின் நலத் திட்டங்கள் உள்ளிட்டவை தங்களுக்கு கை கொடுக்கும் என நம்புகிறது பாஜக.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் இமாச்சலப் பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டு தீவிர பிரசாரம் செய்தனர்.
இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று ஒரே நேரத்தில் 68 தொகுதிகளிலும் பிரசார கூட்டத்தை நடத்தியது காங்கிரஸ். அத்துடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர் ”அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை காங்கிரஸ் அரசு அமல்படுத்தும் என்றும் பெண்களுக்கு ரூ1,500 உதவித் தொகை, தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ரூ.680 கோடி நிதி உதவி என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இவ்வாறாக இந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில் நாளை (நவம்பர் 11 ) வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வீழ்ந்த இந்தியா… எழுந்த பாகிஸ்தான்… நிபுணர்கள் அடுக்கும் காரணங்கள்!
6 பேர் விடுதலை : ஆளுநர் செய்த தவறு! – ராமதாஸ்