இன்னும் 4 நாட்களில் இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவுக்கு ஐக்கியமாகி இருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இமாச்சல பிரதேத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
எனினும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மூன்று கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட முன்னணித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பூபேஷ் பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, இமாச்சல பிரதேசத்தில் இன்று (நவம்பர் 8) தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர்.
இது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இந்நிகழ்வு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தரம்பால் தாக்கூர், முன்னாள் செயலாளர் ஆகாஷ் சாயினி, முன்னாள் கவுன்சிலர் ராஜன் தாக்கூர், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் அமித் மேத்தா உள்ளிட்ட 26 பேர் நேற்று (நவம்பர் 7) பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் சிம்லா தொகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஹர்ஷ் மகாஜனுக்கு விசுவாசமாக இருந்தவர்கள். ஹர்ஷ் மகாஜன், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
தற்போது அவருடைய விசுவாசிகளும் பாஜகவில் சேர்ந்திருப்பது, காங்கிரஸ் தேர்தல் களத்தில் கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது.
இவர்களை வரவேற்கும் விதமாக அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் அக்கட்சியி்ல் இருந்து வெளியேறி இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.
பாஜக குடும்பத்தில் இணைந்துள்ள அவர்களை வரவேற்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
10 சதவிகித இட ஒதுக்கீடு : முதல்வர் ஆலோசனை!
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது: அண்ணாமலை