இமாச்சல் தேர்தல்: 57 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

அரசியல்

இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

68 எம்எல்ஏக்கள் கொண்ட இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இன்று அந்த மாநிலத்தில் (அக்டோபர் 17) வேட்புமனுத் தாக்கல் தொடங்க இருக்கிறது. இதையொட்டி, வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த மாநிலத்தில் காங்கிரஸும் பாஜகவும் மாறிமாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், அதை அகற்றுவதற்கு காங்கிரஸும் போராடி வரும் நிலையில், அவ்விரு கட்சிகளுக்கு போட்டியாக ஆம் ஆத்மியும் களம் புகுந்துள்ளது.

இதனால் அம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பிரதான கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னரே, ஆம் ஆத்மி இந்த மாநிலத்துக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இதன்மூலம், இமாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த முதல் கட்சி என்ற பெருமையை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

அந்தக் கட்சி இமாச்சலில் உள்ள பதேபூர், நக்ரோட்டா பக்வான், பாவோன்டா சாகிப் மற்றும் லஹால்-ஸ்பிடி ஆகிய 4 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர்களை கடந்த செப்டம்பர் மாதமே அறிவித்திருந்தது.

ஆம் ஆத்மி சார்பில் அந்த தொகுதிகளின் வேட்பாளர்களாக முன்னாள் எம்.பி. ராஜன் சுசாந்த் (பதேபூர்), மணீஷ் தாக்குர் (பாவோன்டா சாகிப்), உமாகாந்த் தோக்ரா (நக்ரோட்டா பக்வான்) மற்றும் சுதர்ஷன் ஜஸ்பா (லஹால்-ஸ்பிடி) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸும் தனது வேட்பாளர்களை நேற்று (அக்டோபர் 16) அறிவித்துள்ளது.

அது, முதற்கட்டமாக 57 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அது தெரிவித்துள்ளது.

ஆனால், பாஜக சார்பில் இதுவரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை. அந்த கட்சி சார்பில் இன்னும் சில தினங்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

ஜெ.பிரகாஷ்

எடப்பாடி Vs பன்னீர்: இன்று சட்டமன்றத்தில் என்ன நடக்கும்?

சட்டப்பேரவை இருக்கை: பன்னீருக்கு அதே இடம்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *