இமாச்சல் பிரதேச தேர்தலை முன்னிட்டு அம்மாநில காங்கிரஸ் இன்று (நவம்பர் 5) தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. இதில் சில குறிப்பிட்ட திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போன்று உள்ளது.
68 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு நவம்பர் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இமாச்சலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையிலும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று இமாச்சல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் இமாச்சல் பிரதேச காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, தேர்தல் அறிக்கை குழு தலைவர் தனிராம் சந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் :
முதியவர்களுக்கான பழைய ஓய்வூதியத்திட்டம் புதுப்பிக்கப்படும்
வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும்
18 வயது முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்கப்படும்.
1 லட்சம் அரசு வேலை வழங்கப்படும்.
ஒவ்வொரு கிராமத்திலும் நடமாடும் மருத்துவமனை திறக்கப்படும்
மாட்டுச் சாண வறட்டி ஒரு கிலோ ரூ.2-க்கு கொள்முதல் செய்யப்படும்.
5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் இமாச்சல் பிரதேச காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் பேசியபோது,
“காங்கிரஸ் கட்சி இமாச்சலில் ஆட்சியைப் பிடித்தவுடன் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் பாரம்பரியம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. நாங்கள் பாஜகவை போல் அல்லாமல், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை போல் உள்ளது.
புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வேலையில்லா பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.20 லட்சம் கடன் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும். இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட திமுக வாக்குறுதிகள் போன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன.
செல்வம்
வம்சியிடம் இதயத்தை வாங்கிய திருமூர்த்தி!
தொடரும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!