இமாச்சல்: எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற காங்கிரஸின் மெகா திட்டம்!

அரசியல்

நடந்து முடிந்த குஜராத்,  இமாச்சல் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (டிசம்பர் 8) வெளியாகி வருகின்றன. இதில்  பாஜக குஜராத்தில் இமாலய வெற்றியை பெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. ஆனால் இமாச்சல் பிரதேசத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக காங்கிரசிடம் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இமாச்சலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பகல் 12 மணி நிலவரப்படி… 36 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 28 இடங்களில் பாஜகவும் முன்னிலையில் இருக்கின்றன. .

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதே நேரம் ஒருவேளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை  பாஜக விலைக்கு வாங்கி விடுமோ என்ற அச்சத்தில் தேர்தலுக்கு முன்பே சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டது காங்கிரஸ் கட்சி.

இதற்கும் காரணம் இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்கு முன் பேசிய இமாசல் பிரதேச பாஜக முதல்வர் தாகூர்,  “காங்கிரஸ் அதீத நம்பிக்கையில் இருக்கிறது. அது தவறு. அவர்கள் டிசம்பர் 8 ஆம் தேதி வரைக்கும் காத்திருக்க வேண்டும்.  அதன் பிறகுதான் காங்கிரஸுக்கு பல சர்ப்ரைஸுகள் காத்திருக்கின்றன. அவர்கள் கட்சியில் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட முதல்வர் வேட்பாளர்கள் மோதி வருகிறார்கள். எனவே காங்கிரஸுக்கு தேர்தல் முடிவுக்குப் பின் சவால்களும் காத்திருக்கின்றன” என்று கூறியிருந்தார்.

அதாவது காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் கூட ஆட்சி அமைப்பதில் பல சவால்கள் இருக்கின்றன, காங்கிரசில் இருக்கும் முதல்வர் பதவிக்கான போட்டியை பயன்படுத்தி காங்கிரசை பாஜக உடைக்கும் என்பதுதான் அவரது பகிரங்க கருத்தாக இருந்தது.

இதை எதிர்பார்த்த காங்கிரஸ் வரும் முன் காப்போம் திட்டப்படி, இமாச்சல் பிரதேசத்தில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய காங்கிரஸ் வேட்பாளர்களை உடனடியாக ராஜஸ்தான் அல்லது வேறு காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டது.

இமாச்சல் பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகல்  ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கிறார்.  

அவர் இமாசலப் பிரதேசத்தின் 68 தொகுதிகளுக்கும் தனது கண்காணிப்புக்  குழுவை ஏற்கனவே அனுப்பி வைத்து விட்டார். ஒவ்வொரு காங்கிரஸ் வேட்பாளருக்கும் மைக்ரோ அப்சர்வேர்ஸ் எனப்படக்கூடிய கண்காணிப்பு டீமையும் அவர் நியமித்திருக்கிறார்.

இதன்படி நேற்று இரவு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சில முக்கியமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.

Himachal Congress mega plan to save MLAs after victory

தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியவுடன் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அருகே வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு தங்களது நேரத்தை வீணாக்க கூடாது. வெற்றிச் சான்றிதழ்களை தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்ற உடனடியாக அந்த சான்றிதழை கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு அந்தந்த தொகுதிக்கு என நியமிக்கப்பட்ட மைக்ரோ அப்சர்வர்ஸ் குழுவினர் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வை உடனடியாக இமாச்சலப் பிரதேசத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.  அவ்வாறு அழைத்துச் செல்லும் இடம் காங்கிரஸ் ஆளக்கூடிய ராஜஸ்தானாகவோ சத்தீஸ்கர் ஆகவோ இருக்கலாம்.

அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்  இமாச்சல பிரதேசத்திற்கு வெளியே கடுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்பதுதான் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரான பூபேஷ் பாகலின் திட்டம். 

இன்று முடிவுகள் வெளியாக தொடங்கியதும் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங் ஏற்பாட்டில் காங்கிரஸ் வெற்றியாளர்களை  இமாச்சலப் பிரதேசத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இமாச்சலப் பிரதேச மேலிடப் பொறுப்பாளரான ராஜீவ் சுக்லாவும் இந்த நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.

தேர்தல் பொறுப்பாளரான சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தற்போது இமாசல பிரதேச மாநில தலைநகர்  சிம்லாவில் முகாமிட்டிருக்கிறார்.  வெற்றிபெற்ற  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்து காங்கிரஸ் ஆட்சியை அமைத்துவிட்டுத்தான் சிம்லாவில் இருந்து வெளியே செல்வேன் என்று சொல்லியிருக்கிறார் பாகல். 

இதற்கு இடையே இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக 68 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். இன்றே அவர் டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவுக்கு வருகிறார்.  

தற்போதைய நிலவரப்படி 68 தொகுதிகளில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. 26 தொகுதிகளில் மட்டுமே பாஜக முன்னிலை வகிக்கிறது. 

இந்த பின்னணியில் அமித்ஷாவின் ஆள் பிடி ஆபரேஷனைத் தோற்கடிக்க காங்கிரஸ் இம்முறை முன்கூட்டியே திட்டமிட்டு பணியாற்றி வருவது அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஆரா

நகரும் மாண்டஸ்: சீற்றத்துடன் காணப்படும் கடல்!

குஜராத் தேர்தல்: ரவீந்திர ஜடேஜா மனைவி முன்னிலை!

+1
1
+1
2
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *