ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா இன்று(மே26) வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஜன்னத் ஹிஜாப் அணிந்து பணியில் இருந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் அங்கு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம்,
“நீங்க டியூட்டில இருக்கீங்க; உங்க யூனிஃபார்ம் எங்க. நீங்க ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கீங்க. நீங்க டாக்டர் என்பதே எனக்கு டவுட்டா இருக்கு. எம்.டி. அரவிந்த் டாக்டர் எங்க. இவங்க டாக்டரா? இவங்க டாக்டர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு. ” என மிரட்டும் தொனியில் பேசி இதனை அவர் தனது செல்போனிலும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அதேசமயம், அந்த பெண் மருத்துவர் “பெண்கள் பணியில் இருக்கும்போது அசிங்கமாக பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு பெண் மருத்துவரை அவரின் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார்” எனச் சொல்லி அவரும் வீடியோ எடுத்துள்ளார். இந்த இரண்டு வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, பாஜக நிர்வாகி புவனேஸ்வர ராம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா இன்று(மே26) வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’நாகை மாவட்டம், திருப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்த மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரியவருகிறது.
இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும்.
மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.
எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஜிட்டல் திண்ணை: தம்பிக்கு வைத்த பொறி! டார்கெட் செந்தில் பாலாஜி… ஐடி போட்ட டபுள் ஸ்கெட்ச்!
“சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ஐடி ரெய்டு”: ஆர்.எஸ்.பாரதி
ஐடி வருகை திமுகவுக்குத் தெரியும்போது போலீஸுக்கு தெரியாதா?: அண்ணாமலை
