கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியத் தடை விதித்தது தொடர்பாக பதிலளிக்க அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசின் இந்த தடையை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல.
எனவே கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் இதனை நிராகரித்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜராகி, ஹிஜாப் மேல்முறையீட்டு மனு 4 மாதங்களாக நிலுவையில் இருக்கிறது.
ஆகையால் உடனே விசாரிக்க வேண்டும். அல்லது ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்துவிட்டு பின்னர் இவ்வழக்கை விசாரிக்கலாம் என கோரிக்கை வைத்தார். ஆனால் அதையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை,
இந்த நிலையில் ஹிஜாப் வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா அமர்வு முன் இன்று(ஆகஸ்ட் 29) நடைபெற்றது.
விசாரணையின் போது, ஹிஜாப் அணியத் தடை விதித்தது தொடர்பாக கர்நாடக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இவ்வழக்கின் விசாரணையை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
கலை.ரா
தேர்வறையில் ஹிஜாப் சர்ச்சை: ஆசிரியர் சங்க நிர்வாகி விளக்கம்!