”ஹிஜாப் தடை நீக்கப்படும்” – சித்தராமையா உறுதி!
கர்நாடகாவில் ஹிஜாப் தடை விரைவில் நீக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா உறுதியாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படாததை அடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது. அதற்கு அடுத்த மாதமே அப்போது ஆட்சியில் இருந்து பாஜக அரசு, கர்நாடகாவில் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
பின்னர் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நிலையில், ஹிஜாப் மீதான தடையை நீக்கக்கோரி தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் மீதான தடையை அரசு நீக்குவதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், “உடுத்துவதும் உணவு உண்பதும் அவரவர் விருப்பம், நாம் ஏன் ஆட்சேபனை செய்ய வேண்டும்? மக்கள் என்ன உடை வேண்டுமானாலும் அணியட்டும். என்ன வேண்டுமானாலும் சாப்பிடட்டும். நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? வாக்குகளுக்காக அரசியல் செய்யக்கூடாது, அதை நாங்கள்(காங்கிரஸ்) செய்ய மாட்டோம்” என்று சித்தராமையா கூறியிருந்தார்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று அவர் தனது X பக்கத்தில், “பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி உணவு, உடை, ஜாதியின் அடிப்படையில் மக்களைப் பிரித்து சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது. ஹிஜாப் தடையை வாபஸ் பெற உத்தரவிட்டுள்ளேன்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“நிர்மலா சீதாராமன் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை” : உதயநிதி பதில்!
”பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருக்கிறாரா எடப்பாடி?”: கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் கேள்வி!