தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதைத் தடுக்கவும், சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆகஸ்டு 27) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்க கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பது, உயர்வு ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையிலே, “தமிழகத்தில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, போக்குவரத்து சேவை கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு,
கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு என்ற வரிசையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தன் பங்கிற்கு சுங்கக் கட்டணத்தை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் உயர்த்த முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தச் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்திக் கொண்டு வருவதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு ஏற்கெனவே ஏப்ரல் மாதம் முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
ஏற்கெனவே சாலைகள் பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில், சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், சுங்கக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
மாறாக கடும் கண்டனத்திற்குரியது. இந்தச் சுங்கக் கட்டண உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும், வாகன உரிமையாளர்களையும், பாதிக்கும் செயலாகும்” என்று குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்,
“இந்தக் கட்டண உயர்வையடுத்து, வாகன உரிமையாளர்கள் வாகனத்திற்கான கட்டணங்களை உயர்த்தும் சூழ்நிலை உருவாகி, அதன்மூலம் அத்தியாவசிப் பொருட்களின் விலை மேலும் உயரும் சூழ்நிலை ஏற்படும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டமன்றத்தில் பேசிய, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதை மத்திய அரசிடம் தெரிவிக்க இருப்பதாகவும்,
இதில் முதற்கட்டமாக, பத்து கிலோ மீட்டர் சுற்றெல்லையில் உள்ள நெமிலி, சென்னசமுத்திரம், வானகரம், பரனூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை உடனடியாக மூடும் திட்டம் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு முடிவடையும் நிலையில், அதே நிலைமைதான் தொடர்கிறது.
விதிகளுக்கு ஏற்ப சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும்.
எனவே, உயர்த்தப்படவுள்ள சுங்கக் கட்டணத்தை தடுத்து நிறுத்தவும், விதிகளுக்கு ஏற்ப சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
செல்வம்
கோவை: 2 மாதங்களில் 3ஆவது முறையாக அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் !