தமிழ்நாடு – உத்தரப் பிரதேசம் : பைடனுக்கு மோடி கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்!

Published On:

| By Kavi

gold and silver price

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மரியாதை மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சிறப்புப் பரிசை வழங்கினார்.

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் (ஜூன் 20) டெல்லியில் இருந்து கிளம்பி அமெரிக்கா சென்றார்.

நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை வளாகத்தில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடிக்கு ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் வருகையையொட்டி விமானப்படை தளத்தில் இரு நாட்டின் தேசிய கீதங்களும் ஒலிக்கப்பட்டன.

பின்னர் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளைக்குச் சென்ற மோடி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.


இந்நிலையில் இன்று (ஜூன் 22) வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அதிபர் பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரு நாட்டு தலைவர்களும் கட்டித் தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

அப்போது பிரதமர் மோடி ஜோ பைடனுக்கும், ஜில் பைடனுக்கும் இந்தியாவில் இருந்து எடுத்துச் சென்ற பரிசை வழங்கினார்.


சந்தன கட்டையால் செய்யப்பட்ட கலைவண்ணம் மிக்க பெட்டியை ஜோ பைடனுக்கு பரிசளித்த பிரதமர் மோடி, 7.5 காரட் கொண்ட வைரக்கல்லை ஜில் பைடனுக்கு பரிசளித்தார். இந்த வைரம் பூமியில் வெட்டப்பட்ட வைரங்களின் ரசாயன மற்றும் ஒளியியல் பண்புகளை பிரதிபலிக்கிறது.


அதுபோன்று பைடனுக்கு வழங்கப்பட்ட சந்தன பெட்டி என்பது ராஜஸ்தானைச் சேர்ந்த கைவினை கலைஞர் ஒருவரால் தயாரிக்கப்பட்டது. மைசூரில் இருந்து பெறப்பட்ட சந்தன கட்டைகளை கொண்டு, அதில் தாவரங்கள், மயில் உள்ளிட்ட பறவை மற்றும் விலங்குகளின் வடிவங்களை செதுக்கி இந்த பெட்டி உருவாக்கப்பட்டது.


வெள்ளி விநாயகர், வெள்ளி விளக்கு.

பைடனுக்கு கொடுத்த இந்த சந்தன பெட்டியில் எல்லா தடைகளை அழிப்பவராகவும், கடவுள்களில் முதன்மையானவராகவும் கருதப்படும் விநாயகர் சிலை, இடம்பெற்றிருந்தது. இந்த சிலை வெள்ளியால் வடிவமைக்கப்பட்டது.

அதுபோன்று ஒரு வெள்ளி விளக்கும் இடம்பெற்றிருந்தது. கொல்கத்தாவைச் சேர்ந்த வெள்ளித் தொழில் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது.

செப்பு தகடு

தம்ரா – ப்த்ரா என்று அழைக்கப்படும் செப்புத் தகடும் அந்த பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இது உத்தரப் பிரதேசத்தில் இருந்து பெறப்பட்டதாகும். இந்த செப்பு தகடு பண்டைய காலங்களில் எழுதுவதற்கும், வரலாற்றை பதிவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த திறமையான கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட வெள்ளி தேங்காயும் இந்த பெட்டியில் இடம் பெற்றிருந்தது.

வெள்ளை எள்


தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்ட வெள்ளை எள்,

கர்நாடகாவில் இருந்து பெறப்பட்ட மணம் வீசும் சந்தனகட்டை துண்டு,

ராஜஸ்தானில் இருந்து பெறப்பட்ட 24 கேரட் கொண்ட தங்க நாணயம்,

பஞ்சாபிலிருந்து பெறப்பட்ட நெய்,

ஜார்க்கண்டில் இருந்து பெறப்பட்ட டஸ்ஸார் பட்டுத் துணி,

உத்தரகாண்டில் இருந்து பெறப்பட்ட தானிய அரிசி,

மகாராஸ்டிராவில் இருந்து பெறப்பட்ட வெல்லம்,

குஜராத்தில் இருந்து பெறப்பட்ட உப்பு,


ராஜஸ்தான் கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட 99.5 சதவிகித தூய்மையான மற்றும் ஹால்மார்க் வெள்ளி நாணயம் ஆகியவற்றை அந்த சந்தன பெட்டியில் வைத்து கொடுத்துள்ளார்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தானத்தை குறிப்பதாகும். இதில் வெள்ளி தேங்காய் என்பது பசு தானத்தையும், சந்தனகட்டை துண்டு என்பது நில தானத்தையும் குறிக்கிறது.

அதுபோன்று எள் தானம், தங்க தானம், நெய் தானம், ஆடை தானம், தானிய தானம், வெள்ளி தானம், உப்பு தானம், ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் பைடனுக்கு வழங்கிய சந்தன பெட்டியில் மேற்குறிப்பிட்ட பொருட்களை வைத்து இந்திய கலாச்சார முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இப்படி ஒரு பரிசை வழங்கியிருக்கிறார் பிரதமர் மோடி.


இந்து முறைப்படி சஹஸ்ர சந்திர தரிசன விழா கொண்டாடப்படுகிறது. தனது வாழ்நாளில் ஆயிரம் முழு நிலவுகளைக் கண்டவருக்கு இந்த விழா நடத்தப்படும். இவ்விழா 80 வயதை தொட்டவர்களுக்கே கொண்டாடப்படும். அப்போதுதான், இதுபோன்று பசு, நிலம், தங்கம், வெள்ளி, எள், நெய் அல்லது வெண்ணெய், உணவு தானியங்கள், ஆடைகள், வெல்லம், உப்பு என 10 விதமான தானங்கள் செய்யப்படும்.
இந்த கொண்டாட்டத்தை குறிப்பிடும் வகையில், தற்போது 80 வயதாகும் ஜோ பைடனுக்கு இந்த சந்தனபெட்டியை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
பிரியா

44 ஆயிரத்திற்குக் கீழ் சென்ற தங்கம் விலை!

தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel