high court order assembly speaker

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி : சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவு!

அரசியல்

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரிய வழக்கில் சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 10) உத்தரவிட்டுள்ளது. high court order assembly speaker

கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் போது ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால்,  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காத நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக நானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சி கொறடாவாகவும், எஸ்.ரவி துணை கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்ற கட்சியின் செயலாளராக அன்பழகன் மற்றும் துணை செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு, ஜூலை 17-ல் கட்சியின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். 5 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையின் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகரிடம் முறையிட்டோம். அது தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களுடன் அமர்ந்து இருப்பதால், விவாதங்களின் போது அதிமுகவினரால் திறமையாக செயல்பட முடியவில்லை. எனவே, கட்சியில் இருந்து சட்டமன்ற பதவிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அங்கீகரிக்க, சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உரிய இருக்கை வழங்கி அங்கீகரிக்க கோரி 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று வாதிட்டார்.

இதனைக் கேட்ட நீதிபதி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் வரும் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். high court order assembly speaker

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

சலார் படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட்!

”மாலைக்குள் மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும்”: முதல்வர் ஸ்டாலின்

10 மாவட்டங்களில் கனமழை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *