judge Abhijit Gangopadhyay join to BJP
நீதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ள கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணையவுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அபிஜித் கங்கோபாத்யாய். இவரது பதவிகாலம் முடிவடைய இன்னும் 5 மாதங்கள் தான் உள்ளன.
இந்நிலையில் அபிஜித் கங்கோபாத்யாய், தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகவும் பெங்காலி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும், பாஜக, காங்கிரஸ், சிபிஐ(எம்) ஆகிய ஏதேனும் ஒரு கட்சிகளில் இணையப்போவதாகவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
எந்தக் கட்சியின் பெயரையும் அவர் குறிப்பிடாத நிலையில் அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைய இருப்பதாகவும், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் அப்போதே யூகங்கள் கிளம்பின.
அதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று (மார்ச் 5) மதியம் கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் இருக்கும் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி அபிஜித், “வரும் மார்ச் 7ஆம் தேதி பாஜகவில் இணைய போகிறேன். ஊழல் கட்சியான திரிணமூல் காங்கிரஸை எதிர்த்து போராடும் தேசிய கட்சி பாஜக. பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர்” என புகழாரம் சூட்டினார்.
பாஜகவில் சேர அக்கட்சியினரை நீங்கள் அணுகினீர்களா என்ற கேள்விக்கு, “ஆம்… நானும் அணுகினேன். அவர்களும் என்னை அணுகினார்கள். கடந்த 7 நாட்களாக இந்த சந்திப்பு நடந்தது” என கூறினார்.
பிரதமர் மோடி மிகவும் நல்லவர், கடின உழைப்பாளி. நாட்டுக்காக ஏதாவது செய்ய முயற்சித்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்த அபிஜித் கங்கோபாத்யாய் காங்கிரஸை பற்றி பேசும் போது, அது வாரிசு அரசியல் கட்சி என விமர்சித்தார்.
“திரிணாமுல் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது ஊழல் நிறைந்த கட்சி. அக்கட்சியில் ஒரு சில நல்லவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் இந்த கட்சியின் உண்மை தன்மையை அறிந்திருக்கவில்லை. அந்த கட்சியில் சில கைது நடவடிக்கைகள் தேவை. அக்கட்சி விரைவில் சிதைந்துவிடும். திரிணமூல் காங்கிரஸ் நீடிக்கப்போவதில்லை” என கூறினார்.
மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸுடன் முரண்பட்டிருக்கும் அபிஜித் கங்கோபாத்யாய், தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணையப்போவதாக கூறியிருப்பது தேசிய அளவில் பேசு பொருளாகியிருக்கிறது.
யார் இவர்?
கொல்கத்தா ஹர்சா சட்ட கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கறிஞராக பயிற்சி பெற்று, கொல்கத்த உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.
2018ஆம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அபிஜித் கங்கோபாத்யாய் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் நிரந்தர நீதிபதி ஆனார்.
இவர் நீதிபதியாக இருந்த காலக்கட்டத்தில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியவர்.
நீதிபதிகளுக்கு இடையே மோதல்…
மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் போலி சான்றிதழ் வழங்கப்பட்டு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மூத்த நீதிபதி சோமன் சென் தலைமையிலான அமர்வு தடை விதித்தது.
இந்த வழக்கில் தாமாக முன்வந்து தலையிட்ட நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதோடு மூத்த நீதிபதியான சோமன் சென் செயல் தவறானது என்றும் அவர் ஆளும் மாநில அரசுக்கு ஆதரவாக அரசியல் சார்புடன் செயல்படுகிறார் என்றும் விமர்சித்திருந்தார்.
இதில் இரு நீதிபதிகளுக்கும் இடையே யாருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது என மோதல் போக்கு ஏற்பட்டு, இவ்விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. judge Abhijit Gangopadhyay join to BJP
வரலாற்றில் இதுபோன்ற வழக்கை சந்திக்காத உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்தது. இந்த அமர்வு, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற அபிஜித் கங்கோபாத்யாய் உத்தரவுக்கு தடை விதித்தது.
மம்தா அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வழக்கு!
அதுபோன்று மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் வழக்கில் முக்கிய உத்தரவை பிறப்பித்தவர் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்.
மேற்கு வங்கத்தில் 2014ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதனடிப்படையில் தொடக்கப் பள்ளிகளில் 42,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் நிறையபேர் பணம் கொடுத்து வேலையை பெற்றனர் என்றும் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் உட்பட பலருக்கு இந்த ஊழலில் தொடர்பிருப்பதாக கூறி, அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், தேர்வு செய்யப்பட்ட 42,500 ஆசிரியர்களில் 36,000 பேருக்கு வழங்கப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டார்.
“மேற்கு வங்க தொடக்க பள்ளிக் கல்வித் துறையின் தலைவராக இருந்த மாணிக் பட்டாச்சார்யா மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவருகிறது. எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல், தகுதியும் இல்லாத 36,000 ஆசிரியர் நியமனங்கள் ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கு இன்று வரை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இவ்வழக்கில் கைதாகியுள்ள மாணிக் பட்டாச்சார்யாவுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் கூட அமலாக்கத் துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நீதிபதியாக இருக்கும்போதே மம்தாவுக்கு எதிராக பேட்டி!
இந்த ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்குத் தொடர்பாக பெங்காலி ஊடகம் ஒன்றுக்கு நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பேட்டி அளித்திருந்தார். அதில், ஆசிரியர் தேர்வு முறைகேடு விவகாரத்தில், திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனுமான அபிஷேக் பானர்ஜிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாவில் கருத்துகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அபிஷேக் பானர்ஜி.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “நீதிபதிகளுக்கு தொலைகாட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதற்கான எந்த வேலையும் இல்லை . நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா முன்பு விசாரணையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் தேர்வு வாரிய முறைகேடு வழக்குகளையும் வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனது ஊடக நேர்காணலின் மொழிபெயர்ப்பை தனக்கு வழங்குமாறு உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு தாமாக முன் வந்து உத்தரவிட்டார் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா.
அன்றைய தினமே, இரவு 8 மணிக்கு சிறப்பு அமர்வை கூட்டி உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், “இது நீதித்துறை ஒழுக்கத்திற்கு எதிரானது” என கூறி நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா உத்தரவை ரத்து செய்தது.
இப்படி தொடர்ந்து சர்ச்சைக்கு பெயர்போன நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா தற்போது பாஜகவில் இணையப் போவதாக அறிவித்திருப்பது, மேற்கு வங்காள அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
ஏற்கனவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஓய்வுக்குப் பின் 2020 இல் பாஜகவால் ராஜ்ய சபா எம்பியாக நியமிக்கப்பட்டார். இப்போது உயர் நீதிமன்ற நீதிபதி ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைகிறார்.
இதுபோன்ற சம்பவங்களால் நீதித்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம்… கார் ரேஸ் குறித்து எதுவும் தெரியாது: நிவேதா பெத்துராஜ்
மேரி கிறிஸ்துமஸ், லவ்வர், லால் சலாம் படங்களின்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!