கோவையில் ஏப்ரல் 6, 2024 அன்று சாய் விவாகா மகாலில் Professional in Politics என்ற பெயரில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு சமச்சார் மன்யாதா அசோசியேசன் ஃபார் ரிசர்ச் & டிரெய்னிங் (Samachar Manyata Association for Research & Training – SMART) என்ற நிறுவனத்தின் சார்பில் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது THE IDEA CALLED ‘MALAI’ என்ற பெயரில் அண்ணாமலையைப் பற்றிய ஒரு புத்தக வெளியீடும் திட்டமிடப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த காவல்துறை, தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும், இதற்கு காவல்துறை அனுமதி தர முடியாது, தேர்தல் ஆணையம் தான் அனுமதி தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் 23 பிப்ரவரி 2024 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேஜை விவாத நிகழ்ச்சி அங்கு நடைபெற்ற போதும் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்ததை காவல்துறை சுட்டிக் காட்டியிருந்தது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ரங்கராஜ் பாண்டே, பத்ரி சேஷாத்ரி உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வதாக இருந்தனர். இந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து புதுச்சேரியைச் சேர்ந்த தர்மராகவன் உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சட்டம் ஒழுங்கு பாதிப்பு வரும் என்று சொல்லி அனுமதி மறுத்த அரசு தரப்பை கடுமையாக சாடினார். விண்ணப்பதாரர் அரசாங்கத்துடன் நட்பாக இல்லாத காரணத்தினாலேயே இதுபோன்ற விஷயங்களில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று அரசுக்கு அறிவுறுத்துமாறு அரசு வழக்கறிஞர் முகிலனிடம் வாய்மொழியாகக் கூறினார்.
மேலும் ஒரு சிறிய உள்ளரங்கு கூட்டத்திற்குக் கூட காவல்துறையால் பாதுகாப்பு கொடுக்க முடியாதென்றால், சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கான போதுமான திறன் காவல்துறைக்கு இல்லை என்பதை ஏற்றுக் கொண்டதாகவே அர்த்தம் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் அனுமதி மறுத்ததை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட்டார். இந்நிலையில் அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தேர்தல் அதிகாரி அனுமதி அளித்துள்ளார்.
ராமநவமி தீர்த்த யாத்திரை
இதேபோல் மற்றொரு பெட்டிசனும் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை என்ற அமைப்பின் சார்பில் ராம நவமி தீர்த்த யாத்திரை என்ற பெயரில் 6 நாட்களுக்கு யாத்திரை நடத்த அனுமதி கோரப்பட்டது. ஏப்ரல் 12 ஆம் தேதி துவங்கி 17 ஆம் தேதி வரையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை, கேரளாவின் வண்டூர் பகுதியில் துவங்கி தமிழ்நாட்டில் நுழைந்து பிறகு மீண்டும் திருவனந்தபுரத்தில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் களியக்காவிளை வரையிலான பகுதிகளில் 10 மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்கள் மற்றும் ஆசிரமங்களை இணைத்துச் செல்லும் வகையில் இந்த யாத்திரை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கேட்டு ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை சார்பில் டி.ஜி.பியிடம் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
ஆனால் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் இப்படிப்பட்ட யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி அந்த அறக்கட்டளை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அரசு தரப்பை நோக்கி கடுமையான கேள்விகளை முன்வைத்தார். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்த யாத்திரைக்கு அனுமதி கொடுக்க முடியாது என்றால், இதே தேர்தல் நேரத்தில் ரம்ஜான் பண்டிகை நடக்கிறது. அந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அனுமதி கொடுக்காமல் இருக்கிறீர்களா அல்லது பாதுகாப்பு கொடுக்காமல் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். இது அங்கிருந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அத்துடன் ராம நவமி தீர்த்த யாத்திரை நடத்துவதற்கு அனுமதி வழங்கவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
வணங்காமுடி
மின்னம்பலம் செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
50 ஆண்டு திமுக பயணம்… கடைசி மூச்சும் கட்சிக்காகவே… யார் இந்த புகழேந்தி?
மாநிலங்களை பாளையக்காரர்களாக மாற்றும் பாஜக: ப.சிதம்பரம் தாக்கு!
Thalaivar 171: மாநகரம், கைதி கனெக்ட்… பாலிவுட்டின் பெரிய ஹீரோவை களமிறக்கும் லோகேஷ்