பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி, டெல்லியை சேர்ந்த தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் 2019ல் ஆவணப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, தனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேட்டியளிக்க மேத்யூ சாமுவேல் உள்பட ஏழு பேருக்கு தடை விதிக்க கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்தது.
இந்தநிலையில், “மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால் தனது வீட்டில் சாட்சியை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக உள்ளதால், தனக்கான பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக உயர் நீதிமன்றத்துக்கு வரும் போது மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும். எனவே ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் அந்த மனுவில், “மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. சட்ட நடைமுறைகளை பின்பற்ற தயாராக இருக்கிறேன். வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்ற இந்த மனுவை ஏற்கவேண்டும்” என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று (நவம்பர் 7) விசாரணைக்கு வந்தது.
அப்போது மேத்யூ சாமுவேல் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, “இந்த வழக்கில் சாட்சிப்பதிவை ஒத்திவைக்க கோரி எடப்பாடி பழனிசாமி 21 முறை அவகாசம் கோரியிருந்தார். தற்போது நீதிமன்றத்துக்கு வர மறுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
சென்னை உயர் நீதிமன்றம் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் வருகிறது. எனவே பாதுகாப்பு வழிமுறைகள் என கூறி அவர் வர மறுப்பதை ஏற்கமுடியாது” என்று வாதாடினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலனை நியமித்து, எடப்பாடி பழனிசாமி நீதிமன்றம் வருவதற்கு விலக்களித்து உத்தரவு பிறப்பித்தார்.
ஒரு மாதத்துக்குள் சாட்சிப்பதிவை முடித்து டிசம்பர் 15ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
திமுக எம்.பி. கவுதம சிகாமணி நேரில் ஆஜராக உத்தரவு!
அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!