கறுப்பர் கூட்டம் அலுவலகத்தை திறக்க அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு!
கறுப்பர் கூட்டம் என்ற பெயரை கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டு அரசியலை கவனிப்பவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது.
கந்த சஷ்டி கவசத்தை அவமதித்து இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்யக்கோரியும் பாஜக 2020 ஆம் ஆண்டு ஆங்காங்கே போராட்டங்களை நடத்தியது. சேனலை தடை செய்யக் கோரியும், அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜக மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா, வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமார் அகா்வாலிடம் 2020 ஜூலை 13 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தனா்.
அந்தப் புகாரில், “முருகக்கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாகவும், இந்து மதத்தை அசிங்கப்படுத்தியும் வீடியோ வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்து மத தெய்வங்களையும் , வழிபாட்டு முறைகளையும், இதிகாசங்களையும், புராணங்களையும் இழிவுபடுத்தி வருவதாகவும், இந்த யூடியூப் சேனலுக்கு தடைசெய்யப்பட்ட அமைப்பிடமிருந்து பணம் வருவதாக சந்தேகம் இருப்பதாகவும், இதை தீவிரமாக விசாரித்து அந்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும்” என்றும் கறுப்பர் கூட்டம் மீது புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 சட்டப்பிரிவுகளின்கீழ் சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகளில் ஒருவரான வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில்வாசன் என்பவரை 2020 ஜூலை 15 ஆம் தேதி கைது செய்தனா். கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோவில் பேசிய சுரேந்திரன் புதுச்சேரியில் 2020( ஜூலை 16 ) ஆம் தேதி சரணடைந்தார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. என்றாலும், அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின், சென்னை தியாகராயநகரில் இயங்கி வந்த கறுப்பா் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்துக்கு போலீஸார், 2020ம் ஆண்டு ( ஜூலை 17 )ஆம் தேதி சீல் வைத்தனர்.
அதேநேரத்தில் செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்துச் செய்யக்கோரி அவர்கள் தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவு பிறப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தின் அடிப்படையில் இருவர் மீதான குண்டர் சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், கறுப்பர் கூட்டம் சார்பாக கடந்த இரண்டு வருடங்களாக அலுவலகம் பூட்டி இருப்பதால் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் பழுதடைய வாய்ப்புள்ளதால் அலுவலகத்தை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக, இன்று (ஜூலை 20) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், கறுப்பர் கூட்டம் அலுவலகத்தை மீண்டும் திறக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்.