அதிமுக முன்னாள் அமைச்சரின் ஊழல் வழக்கு: தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

Published On:

| By christopher

High Court Confirmed Punishment on ADMK Ex-Minister Corruption Case

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர், முன்னாள் செயலாளர் சண்முகம் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 5) உறுதி செய்துள்ளது.

தமிழகத்தில் 1991-96 ஆண்டுகால அதிமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி.

அந்த காலகட்டத்தில், அவருடைய கணவர் பாபு நிர்வாக அறங்காவலராக இருந்த அறக்கட்டளைக்கு மாற்றுத் திறனாளிகள் பள்ளி துவங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

சமூக நலத்துறையின் அப்போதைய செயலாளர் லட்சுமி பிரானேஷ் அளித்த புகாரின் பேரில், இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, கிருபாகரன், சண்முகம், வெங்கட கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்,  முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறையும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் செயலாளர் சண்முகத்திற்கு 3 ஆண்டுகள் சிறையும் தண்டனை விதித்து கடந்த 2021 ஆண்டு தீர்ப்பளித்தது.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட கிருபாகரன் இறந்துவிட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டதுடன், வெங்கடகிருஷ்ணன் என்பவரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திரகுமாரி உட்பட மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். மனு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இந்திரகுமாரி காலமானார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி இறந்துவிட்டதால் அவரை மட்டும் விடுவித்து, மற்ற அனைவருக்கும் விசாரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழர்களிடம் மன்னிப்பு : மத்திய அமைச்சர் ஷோபா மீதான வழக்கு ரத்து!

உண்மையை உடைத்த மலையாள நடிகை … தமிழ் டைரக்டருக்கு சிக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share