“பூர்வ குடிகளான வன்னியர்கள், தலித் சமூக மக்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரம் பெறுவது உயர்சாதியினரின் சூழ்ச்சியால் தடுக்கப்படுகிறது” என திமுக கூட்டணிக் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பி.பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையிடம் எம்.பி.சி இட ஒதுக்கீட்டின் கீழ் வன்னியர்கள் பெற்றுள்ள இடங்கள் குறித்த தகவல்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்.
இதற்கு ஜூலை 31 தேதியிட்ட பதிலில் டி.என்.பி.எஸ்.சி பணியிடங்கள், ஆசிரியர் பணி, காவல்துறை, மருத்துவப் பணியிடங்கள் உள்ளிட்டவற்றில் வன்னியர்களுக்கு எத்தனை இடங்கள் கிடைத்துள்ளன என்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பார்த்தால் பாமக நிறுவனர் ராமதாசின் வாதம் தவறானது என்று சொல்லும் வகையில் ஆர்.டி.ஐ தகவல் அமைந்திருந்தது. அதாவது இப்போதைய நிலையில், 10.5 சதவீதத்திற்கும் அதிகமாக 19% வரை கல்வி, வேலைவாய்ப்பு இரண்டிலும் வன்னியர்கள் பெற்றிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.
இதற்கு மருத்துவர் ராமதாஸ் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளி விவரங்களை மட்டும் அரைகுறையாகவும், திரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் வன்னியர்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்க திமுக அரசு முயன்றிருக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சிறப்பு நேர்காணலில் இன்று (ஆகஸ்டு 10) பேட்டியளித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பெறப்பட்ட தகவலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மன்னிக்க முடியாத குற்றம்!
அவர், ”வன்னியர்களுக்கான 10.5% சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மக்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில், முக்கியமான கேள்விகளை விட்டுவிட்டு குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பி அதற்கு மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.
பெறப்பட்ட இந்த தகவல்கள் 2018-2022 என 5 ஆண்டுகளுக்கானது. ஆனால் அவை ஓராண்டில் வழங்கப்பட்டிருப்பது போல் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவேன் என முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தார்.
ஆனால் பூர்வ குடிகளான வன்னியர்கள், தலித் சமூக மக்கள் தமிழ் மண்ணில் ஆட்சி அதிகாரம் பெறுவது உயர்சாதி அதிகாரிகளின் சூழ்ச்சியால் தடுக்கப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.
மற்ற சாதியினத்தவருடன் மோதலை உண்டாக்கும் வகையில் தான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகளுக்கு பின்னால் குறிப்பிட்ட உயரதிகாரிகளின் சூழ்ச்சியும், வஞ்சகமும் இருக்கிறது. இந்த தகவலை தந்தது அரசாங்கமோ, அதிகாரியோ இது மன்னிக்க முடியாத குற்றம்.
இதனை தான் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், ”முதல்வர் ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு கிடைக்க வேண்டிய சமூகநீதி காத்த அரசு என்ற பெயரை சில உயரதிகாரிகள் தட்டிப் பறிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டேன்.
உயர்பதவிகளில் எத்தனை வன்னியருக்கு இடம்?
அதே சட்டப்பேரவையில் ‘நாம் 10.5 சதவீதத்துக்கும் அதிகமான இடஒதுக்கீட்டை பெறுகிறோம்’ என வன்னிய சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் சிவசங்கர் பொத்தாம் பொதுவாக கூறினார்.
அப்போது, “சிறு சிறு பதவிகளில் வன்னியருக்கு இடஒதுக்கீடு கிடைப்பது சரி, ஆனால் அதிகாரம் கொண்ட உயர்பதவிகளில் எத்தனை வன்னியருக்கு இடம் கிடைத்துள்ளது?” என்று திருப்பி கேள்வி கேட்டிருந்தேன்.
ஒருவர் கூட வன்னியர் இல்லை!
1989க்கு பிறகு குரூப் 1 பதவிகளில் வன்னியருக்கான இடஒதுக்கீடு கிடைக்கப்பட்டிருந்தால், இன்றைக்கு எல்லா துறைகளிலும் 5 முதல் 10 வன்னியர்கள் உயர் பதவியில் இருந்திருப்பர்.
ஆனால் இன்றைய திமுக ஆட்சியில் ஒரு வன்னியர் கூட டிஜிபி, ஏடிஜிபி, டிஐஜி, டிஎஸ்பி ஆக இல்லை. அதற்கு வன்னிய சமூகத்தவருக்கு சரியான காலத்தில் இடஒதுக்கீடு அடிப்படையில் உயர்பதவிகள் வழங்கப்படாததே காரணம்.
இன்றைக்கு 38 எஸ்.பிக்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. வடதமிழகத்தில் திமுக அரசு வலுவாக இருப்பதற்கு காரணம் வன்னியர்கள் தான். துரைமுருகன், வீரபாண்டிய ஆறுமுகம், செஞ்சியார் போன்றவர்கள் இல்லையென்றால் இன்று திமுக ஆட்சியில் அமர்ந்திருக்க முடியுமா?
நான் திமுக கூட்டணியில் இருக்கிறேன் என்பதற்காக இந்த பிரச்சனை குறித்து பேசாமல் இருக்க முடியாது.
நான் கேட்பது 1989 முதல் இன்று வரை வன்னியர் சமூகம் இந்த 108 சாதிகளுக்கு கிடைத்த பலனில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை உயர்பதவிகளை பெற்று வந்திருக்கிறார்கள் என்ற தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும்” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா