எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுகிறது என்றும் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமானது அல்ல… தேர்தல் நேரத்தில் இணைந்து விடுவார்கள் என்று அரசியல் கட்சிகள் மற்றும் விமர்சகர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணியில் அதிமுக இருக்காது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணகிரியில் இன்று (செப்டம்பர் 28) செய்தியாளர்களை சந்தித்த அவர், “பேரறிஞர் அண்ணா மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி குறித்து விமர்சித்ததால் 2 கோடி தொண்டர்கள் கடுமையான கோபத்திற்கு உள்ளானார்கள். தொண்டர்கள், கழக நிர்வாகிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தின் படி தான் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. என்டிஏ கூட்டணியில் அதிமுக இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் ஊடக விவாதங்களில் கலந்து கொள்கின்ற ஊடகவியலாளர்கள், ஒரு சில மூத்த அரசியல் விமர்சகர்கள், நேரம் வரும் போது கூட்டு சேர்ந்துவிடுவார்கள் என்று சொல்லி மக்களை திசை திருப்புவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று எங்களை எதிர்த்து நிற்கக்கூடிய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும், ஒரு நாடகமாடி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நேரம் வந்தால் இணைந்து விடுவார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவை நாங்கள் வெளியேற்றிய உடன் அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக தான் இது போன்று உளறிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில், திமுக தலைமை தனது மற்ற கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தங்களது கூட்டணி உடைந்துவிடும் என்ற பயம் அவருக்கு வந்துவிட்டது. ஏனெனில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என பல்வேறு கட்சிகள் எங்களுடன் ஏற்கெனவே கூட்டணியில் இருந்தவர்கள். தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது என்பதால் காட்சிகள் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
அதேவேளையில் திமுகவின் பொய் பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக தான் இங்கு நாங்கள் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறியுள்ள நிலையில், எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்து வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையும், அதனைத்தொடர்ந்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணி இல்லாமலே சந்திப்போம்.
திராவிட மாடல் என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டிகின்ற இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா, எவ்வளவோ அவமானங்கள் சோதனைகளுக்கு இடையில் தமிழ் மக்களை தட்டி எழுப்பி 1967-ல் இந்த இயக்கத்தை ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்தார்.
இந்த இயக்கத்தின் அடித்தளமாக இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணாவை வேறொரு கட்சித் தலைவர் கீழ்த்தனமாக விமர்சனம் செய்கிறார். இதை பற்றி கவலைப்படாமல் கொள்கை குறித்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை.
இனி வரும் இரண்டு தேர்தல்களிலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திப்போம்” என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
மோனிஷா
டெங்கு காய்ச்சல்… 4 வயது சிறுமி பலி!
தங்கம் விலை: ஒரே நாளில் அதிரடி வீழ்ச்சி!