ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 8) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.
போலி ஆவணங்கள் மூலமாக கோடிக்கணக்கான அரசு நிலங்களை கையகப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை தொடர்ந்து அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார்.
இந்தநிலையில், ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஜூன் 28-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சிறையில் இருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். சம்பாய் சோரன் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து ஜூலை 4-ஆம் தேதி மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றார்.
இந்தநிலையில், ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் ஹேமந்த் சோரன் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது ஒரு மணி நேரம் விவாதம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் 45 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.
81 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்டில் ஆளும் ஜேஎம்எம் கட்சிக்கு 27 சட்டமன்ற உறுப்பினர்களும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 17, ஆர்ஜேடி 1 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 45 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. எதிர்க்கட்சியான பாஜகவிற்கு 24 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜாமீன் பெற கூகுள் லொகேஷன்… முடியவே முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சென்னை ரிச்சி தெருவில் யூடியூபருக்கு கொலை மிரட்டல்… மூவர் கைது!