ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அம்மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து இன்று (ஜூன் 28) வெளியே வந்தார்.
போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை கையகப்படுத்தினார் என்று ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது.
அதன்பேரில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அன்று இரவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை ஹேமந்த் சோரனை கைது செய்தது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரித்தது. இந்தநிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், தன்னை பாஜகவில் இணைய வற்புறுத்துவதாகவும் கூறி ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் ஹேமந்த் சோரன்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ரங்கான் முக்கோபத்யாய், இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் நிலங்களை கையகப்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து ஹேமந்த் சோரன், பிர்சா முண்டா ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். ஜெயிலுக்கு வெளியே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிர்வாகிகள் மற்றும் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா உள்ளிட்ட பலர் திரண்டிருந்தனர். அவர்கள் ஹேமந்த் சோரனுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
9 மாணவிகளுக்கு வைர கம்மல், மோதிரத்தை பரிசளித்த விஜய்