ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று (ஜூலை 4) மீண்டும் பதவியேற்றார்.
போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கான நிலங்களை கையப்படுத்தியதாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இந்த வழக்கில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றார்.
இந்தநிலையில், ஜாமீன் கோரி ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரங்கான் முக்கோபத்யாய், ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி கடந்த ஜூன் 28-ஆம் தேதி உத்தரவிட்டார். அன்றைய தினமே அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் இருந்து வெளியேறினார்.
இந்தநிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று (ஜூலை 3) ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக ஹேமந்த் சோரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த சம்பய் சோரன், தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மேலும், ஆட்சியமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வராக பதவியேற்க ஹேமந்த் சோரனுக்கு அழைப்பு விடுத்தார். இன்று மாலை 5 மணியளவில் ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிம்பிளாக நடந்த இந்த விழாவில் ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: எவ்வளவு தெரியுமா?
T20 World Cup: இந்திய அணி வீரர்களிடம் மோடி சொன்ன அந்த விஷயம்!