ஜார்கண்ட் மாநிலத்தின் 14வது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று (நவம்பர் 28) பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
மொத்தம் 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது. வெற்றி பெற 41 இடங்கள் என்ற நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி 56 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. எதிர்த்து போட்டியிட்ட பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 24 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
பர்ஹாய்த் தொகுதியில் போட்டியிட்ட ஜேஎம்எம் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான ஹேமந்த் சோரன் பாஜகவின் கம்லியேல் ஹெம்ப்ரோமை 39,791 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த நிலையில் அபார வெற்றியை பதிவு செய்த சோரன், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 4வது முறையாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கூட்டணியை சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
’கலைஞர்’ புத்தகம் பரிசளித்த உதயநிதி
முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், அவருக்கு ஏ.எஸ். பன்னீர்செல்வன் எழுதிய ‘Karunanidhi a Life’ என்ற புத்தகத்தை பரிசளித்தார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சார்பாக ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது
ஜார்கண்ட் மாநிலத்தின் 14வது முதல்வராக அவர் பதவியேற்றார். ஜே.எம்.எம் தலைவர் சோரன் மற்றும் அவரது புதிய அமைச்சரவை பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
அவரது வழிகாட்டுதலின் கீழ், ஜார்கண்ட் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து முன்னேறி, அதன் மக்களின் முன்னேற்றத்திற்காக வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.
வரும் நாட்களில் தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஃபெங்கல் புயல்… சென்னைக்கு மழை உண்டா? : வெதர்மேன் அப்டேட்!
’நான் நயன்தாராவுடன் துணை நிற்பேன்!’ – நடிகை பார்வதி
ஃபெங்கல் புயலுக்கு என்னாச்சு? : வானிலை மைய இயக்குநர் பேட்டி!