எனது எம்.பி. பதவி பறிக்கப்படும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி 6நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று கலிஃபோர்னியாவில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார்.
இன்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி,
“ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இந்தியாவில் போராடி வருகின்றன. ஜனநாயகம் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக போராடி வருகிறோம்” என்றார்.
இந்திய மாணவர்களுக்கு மத்தியில் பேசிய அவர்,
“இங்கு ஏராளமான இந்திய மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நட்புபாராட்ட விரும்புகிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன். அப்படி செய்வது எனது உரிமை” என குறிப்பிட்டார்.
சிலிக்கான் வேலியை சேர்ந்த ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் குழுவுடன், பெகாசஸ் ஸ்பைவேர் தொடர்பாகவும், தனிமனித தரவுகள் திருடப்படுவது தொடர்பாகவும் பேசிய ராகுல் காந்தி, “இதைப் பற்றிஎல்லாம் நான் கவலைப்படவில்லை. எனது ஐபோன்கூட ஒட்டு கேட்கப்படுகிறது என்று எனக்குத்தெரியும்.

ஒரு அரசாங்கம் தொலைபேசியை ஒட்டுக் கேட்பதில் உறுதியாக இருந்தால் அதை ஒன்றும் செய்யமுடியாது. நான் எதை செய்ய நினைத்தாலும், என்ன வேலை செய்தாலும் அது அரசுக்குத்தெரியும். அது நாட்டின் நன்மைக்காகவே இருக்கும்” என்றார்.
அப்போது தனது போனை எடுத்து நகைச்சுவையாக ஹலோ மிஸ்டர் மோடி என கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்துப் பேசிய அவர், “அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். 2004ல் நான் அரசியலுக்கு வரும் போது நாட்டில் இப்படி எல்லாம் நடக்கும் என நினைத்துக் கூட பார்த்ததில்லை.
எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் அமர்வதை விட பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது என்று நான் பார்க்கிறேன். நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் பாஜக கைப்பற்றிவிட்டது” என்று குறிப்பிட்டார் ராகுல் காந்தி.
பிரியா
ஜூனியர் ஆசியக்கோப்பை: பைனலில் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா
சீமானின் புதிய ட்விட்டர்பக்கம்: முதல் பதிவிலேயே முதல்வருக்கு நன்றி!