உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (டிசம்பர் 30) அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 100.
யார் இந்த ஹீராபென் மோடி
கடந்த 1923ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் வட்நகர் பகுதியில் பிறந்தார். இளம் வயதிலேயே இவருக்கு திருமணம் நடந்தது. தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹீராபென்னுக்கு 6 குழந்தைகள் பிறந்தன.
சோமா மோடி, அம்ருத் மோடி, பிரஹலாத் மோடி, பங்கஜ் மோடி, நரேந்திர மோடி ஆகிய 5 மகன்களும், வசந்திபென் என்ற மகளும் உள்ளனர். இதில் நரேந்திர மோடி ஹீராபென்னுக்கு பிறந்த மூன்றாவது குழந்தை. தனது கணவர் மறைவுக்கு பிறகு ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள பங்கஜ் மோடி வீட்டில் வசித்து வந்தார்.
என் அம்மா என் வாழ்க்கை தூண்
பிரதமர் மோடி முதன் முறையாக குஜராத் முதல்வர் ஆன போது, யாரிடமும் லஞ்சம் வாங்கக் கூடாது என்று ஹீராபென் அறிவுரை கூறியுள்ளார்.
2015ல் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் உடனான பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையின் தூண் தனது அம்மாதான் என கூறி உணர்ச்சிவசப்பட்டார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி கூறியதை உறுதிப்படுத்தும் வகையில், 2016ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார் ஹீராபென். அப்போது தனது 94 வயதில் பணம் எடுக்க ஏடிஎம் வாசலில் ஹீராபென் நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஹீராபென்னும் வைரல் புகைப்படங்களும்
பிரதமர் மோடி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரிப்பின் அம்மாவுக்காக ஒரு சால்வை பரிசாக அனுப்பினார். அதற்கு பதிலாக நவாஸ் செரிப் ஹீராபென்னுக்கு புடவை ஒன்றை 2014ல் அனுப்பினார்.
மோடி பிரதமரான பிறகு முதன் முறையாக 2016ல் தான் ஹீராபென், டெல்லியில் உள்ள மோடியின் உத்தியோகபூர்வ குடியிருப்புக்கு சென்றார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் தனது அம்மாவிடம் ஆசி பெறுவதை தவறாமல் கடைபிடித்த பிரதமர் மோடி 2019 நாடாளுமன்ற தேர்தலின் போதும் நேரில் சென்று ஆசி பெற்றார்.
2019ல் தனது 99 வயதிலும் தேர்தலில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அந்த தேர்தலின் போது ஹீராபென்னின் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலானது.
அதாவது நவாஷ் செரிப் கொடுத்திருந்த புடவையை கையில் வைத்திருக்கும் படி ஹீராபென் எடுத்துக்கொண்ட போட்டோ, எடிட் செய்யப்பட்டு அதில், ”எனது மகனுக்காக வாக்களியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள பலரும், குறிப்பாக முதியவர்கள் தயங்கியபோது ஹீராபென் தடுப்பூசி போட்டு கொண்டது பலருக்கும் தடுப்பூசி மீதிருந்த அச்சத்தை நீக்கியது.
அம்மா குறித்து மோடி
கடந்த ஜூன் 18ஆம் தேதி ஹீராபென் 100ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். அப்போது தனது அம்மா குறித்து வலைதள பக்கத்தில் பல நினைவுகளை பகிர்ந்திருந்தார் பிரதமர் மோடி.
அதில், “அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல. பாசம், பொறுமை, நம்பிக்கை, வாழ்க்கை உணர்வு என எல்லாம் நிறைந்திருக்கும். எனது ஆளுமையில் எது சிறப்பாக இருந்தாலும் அது அம்மாவும் அப்பாவும் கொடுத்த பரிசு. டெல்லியில் நான் இருக்கும் போது ஏராளமான நினைவுகள் வந்து செல்கின்றன.
ஹீராபென்னின் இளமை காலம்
எனது அம்மா அவரது தாயின் பாசத்தை பெற்றதில்லை. அவர் சிறுவதில் இருந்தபோதே ஃப்ளூ தொற்றுநோயால் அம்மாவை இழந்துவிட்டார். நமக்கெல்லாம் கிடைத்தது போல அம்மா மடியின் சுகம் அவருக்கு கிடைக்கவில்லை. பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அவரது குழந்தை பருவம் வறுமை நிறைந்ததாக இருந்தது.
திருமணமான பிறகு குடும்பத்தின் மூத்த மருமகளாக இருந்தார். வட்நகரில் நாங்கள் வசித்து வந்தது மிகவும் சிறிய வீடு. அந்த வீட்டில் ஜன்னல், கழிவறை, சமையலறை என எதுவும் இல்லை.
எனது அம்மா அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். வீட்டை நடத்த கூடுதல் பணம் தேவைப்படும். அதனால் அதிகாலையில் வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டு மற்றவர்களின் வீடுகளுக்கு பத்து பாத்திரம் தேய்க்கச் செல்வார்.
இருந்தபோதிலும் நாங்கள் அவருக்கு உதவுவோம் என ஒரு நாளும் எதிர்பார்த்ததில்லை. எனக்கு உள்ளூர் குளத்தில் விளையாடுவது பிடிக்கும். எனவே குளத்துக்கு போகும் போது அழுக்குத் துணிகளையும் எடுத்துச் சென்று துவைத்து வருவேன், இது அம்மாவுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்.
வீட்டு வேலை மட்டுமின்றி பருத்தி உரிப்பது முதல் நூல் நூற்பு வரை அத்தனை வேலையையும் செய்வார்.
மழைக்காலங்களில் எங்கள் வீடு ஒழுகும். இதனால் ஜூன் மாதத்தில் வெயில் காலத்தின் போது அவரே கூரை மீது ஏறி சரி செய்வார். இருந்தபோதிலும் அதிக மழையின் போது ஒழுகத்தான் செய்யும்.
வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடும். இதனால் மழை நீர் சொட்டும் இடங்களில் பாத்திரங்கள் மற்றும் வாளிகளை வைத்து தண்ணீர் சேகரிப்பார். அதன்பின் அந்த நீரை சில நாட்களுக்கு வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்திக்கொள்வார்.
ஜன்னல் இல்லாத எங்கள் வீட்டுக்குள் சமைக்கும் போது புகை எல்லாம் வீட்டுக்குள்ளே தங்கி சுவர் கூரையெல்லாம் கருமையாகிவிடும். இதனால் வீட்டிற்கு தானே வெள்ளையடிப்பார்.
அம்மாவுக்கு வீட்டை அலங்கரிப்பது என்றால் மிகவும் விருப்பம். வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது மட்டுமின்றி அலங்கரிக்கவும் செய்வார். வீட்டின் சுவர்களில் கண்ணாடித் துண்டுகளை ஒட்டி ஓவியங்களை உருவாக்குவார்.
குறிப்பாக படுக்கை சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். சிறு தூசி படிந்திருந்தது அவரது கண்ணில் பட்டாலும், மீண்டும் பெட்ஷீட்டை தட்டிவிட்டுதான் படுக்க வேண்டும். இந்த வயதிலும் அவர் அப்படிதான் இருக்கிறார். அவருக்கு தன் படுக்கை சிறியளவில் கூட கசங்கியிருக்க கூடாது.
காந்திநகரில் தன் சகோதரன் மற்றும் மருமகளுடன் அவர் வசித்து வந்தாலும் தனக்கான வேலையை தானே செய்துகொள்ள முயல்வார். நான் எப்போது, அவரை பார்க்க சென்றாலும் எனக்கு அவர் கையாலே இனிப்பு ஊட்டிவிடுவார்.
குழந்தைகள் சாப்பிட்டு முடித்ததும் வாயை துடைத்துவிடும் அம்மாக்களை போல இந்த வயதிலும் தனது கைக்குட்டையால் எனது வாயை துடைத்துவிடுவார். எப்போதும் ஒரு கைக்குட்டையை அவருடன் வைத்திருப்பார்.
அதுபோன்று வட்நகரில் உள்ள எங்களது வீட்டின் அருகே சுத்தம் செய்ய தூய்மையாளர்கள் வந்தால் அவர்களுக்கு டீ கொடுக்காமல் அம்மா அனுப்பியதில்லை.
பறவைகளுக்கு இரை வைப்பதும், தெருநாய்களுக்கு உணவு வைப்பதும் அவரது வழக்கம்.
பல ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போது பிரதமராக இருக்கிறேன். அம்மாவிடம் பலர் உன் மகன் பிரதமரானதில் பெருமைப்படுகிறாயா என கேட்பார்கள். அதற்கு, “உங்களை போலவே நானும் பெருமைப்படுகிறேன். எதுவுமே என்னுடையது அல்ல. நான் ஒரு கருவி. எல்லாம் கடவுளின் செயல்” என்பார்.
நான் இதுவரை எந்த அரசு நிகழ்ச்சிக்கும், பொது நிகழ்ச்சிக்கும் அம்மாவை அழைத்து சென்றதில்லை. இரண்டே முறை மட்டும்தான் என்னுடன் வந்திருக்கிறார்.
அதில் ஒன்று, ஸ்ரீநகரில் உள்ள லால் செளக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றிவிட்டுத் திரும்பியபோது, அகமதாபாத்தில் நடந்த, மக்கள் மரியாதை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் எனது நெற்றியில் திலகமிட்டார்.
மற்றொன்று நான் 2001ல் முதல்வராக பொறுப்பேற்ற போது என்னுடன் வந்தார். அதுதான் அவர் என்னுடன் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி.
பஞ்சாயத்து தேர்தல் முதல் பார்லிமெண்ட் தேர்தல் வரை அனைத்து தேர்தலின் போது தவறாமல் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவார். அம்மாதான் எனக்கு முதல் ஆசிரியை.
இன்று வரை எனது அம்மாவின் பெயரில் எந்த சொத்தும் இல்லை. அவர் தங்க ஆபரணங்கள் அணிந்து நான் பார்த்ததில்லை. அதை அவர் விரும்பியதும் இல்லை.
என் அம்மா கைவைத்தியம் தெரிந்து வைத்திருப்பார். இன்னும் வாட்நகரில் உள்ள வீட்டின் முன்பு பலர் தங்களது குழந்தைகளுடன் அம்மாவிடம் சிகிச்சை பெற வருவார்கள்.
நான் பொதுவாழ்வில் இல்லாதவரை என்னை நீ, வா, போ என்றுதான் அழைப்பார். ஆனால் பொதுவாழ்வுக்கு வந்த பிறகு என்னை நீங்கள் என்று தான் அழைப்பார். அதுபோன்று டெல்லியில் இருப்பது பிடித்திருக்கிறதா? மனது நிறைவாக இருக்கிறதா என கேட்டுக்கொண்டே இருப்பார்.
என் அம்மாவையும், அவரைப்போன்ற பெண்களையும் பார்க்கும் போது இந்திய பெண்களால் எதுவும் சாதிக்க முடியாது என்று இல்லை என தோன்றும்” என தனது தாயை பற்றிய நினைவுகளை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல் 2022 தேர்தலின் போது தனது அம்மாவிடம் ஆசி பெற்று குஜராத் தேர்தலை எதிர்கொண்டார். அந்த தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றியை பெற்றது.
இந்தசூழலில் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக ஹீராபென் மோடி இன்று காலமானார்.
பிரதமர் மோடி சாப்பிட்டவுடன் வாயை தன் கைக்குட்டை கொண்டு துடைத்துவிடும் தாயார் இன்று இல்லை. பிரதமர் மோடியின் கண்ணீரை துடைக்கவும் கைக்குட்டை இல்லை.
பிரியா
மோடிக்கு ஆறுதல்: ஸ்டாலின், எடப்பாடி தனித்தனியாக பயணம்!
அதிமுகவில் நீடிக்கும் இரட்டை தலைமை: தேர்தல் ஆணைய கடிதத்தால் குழப்பம்!
மிக சிறப்பான கட்டுரை..கண்கள் குளம்..