பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை எழிலகம் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலக அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 2) ஆய்வு மேற்கொண்டார்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் மழை புரட்டி எடுத்து வருகிறது.
கடந்த இரு நாட்களாக அமைச்சர்களும், சென்னை மேயர் பிரியாவும் தொடர் ஆய்வு மற்றும் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களைப் போல பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் இடையூறுக்கு ஆளாவது தவிர்க்கப்பட்டுள்ளது என்றாலும், சில இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. இதனை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அந்தந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மழை நிலவரம் குறித்து சென்னை எழிலகம் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலக அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
எத்தனை நாளுக்குக் கனமழை பெய்யும், பாதிப்பு விவரம், முக்கிய ஏரிகளில் உள்ள நீரின் அளவு, மீட்பு பணி, நிவாரண முகாம் உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின் போது பொதுமக்களிடமும் வீடியோ கால் மூலம் பேசி முதல்வர் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீடியோ காலில் பேசியவர்களிடம் உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வட சென்னையில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. அவை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவினர் சென்னையை மட்டுமல்ல தமிழகத்தையே சீரழித்துவிட்டார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
பிரியா
சென்னையில் 5093 நிவாரண முகாம்கள் தயார்!
தேவர் குருபூஜையில் முதன்முறையாக: காலரை தூக்கிவிடும் டிஜிபி!