சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறங்காமல் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று தொடர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (அக்டோபர் 15) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை நேற்று இரவு முதல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழையில் நனைந்தபடியே நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
நள்ளிரவில் பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரி பகுதியில் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ள விதம், மழை நீர் ஏரிக்கு வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம், கரைகளின் தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவரது சொந்த தொகுதியான சேப்பாக்கத்தில் ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை நேரில் ஆய்வு செய்தார். அங்கு கொட்டும் மழையில் நள்ளிரவிலும் பணி செய்து கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்களுக்கு பால், சிற்றுண்டிகளை வழங்கி அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.
வழக்கமாக தண்ணீர் தேங்குகிற பகுதிகளில் ஒன்றாக அடையாளம் காணப்படுகிற ஜி.பி.சாலை மற்றும் மயிலை முசிறி சுப்பிரமணியம் சாலையில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்ற நடந்த பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து இன்று அதிகாலையில் கொட்டும் மழையில் சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆறு கடலில் கலக்கின்ற முகத்துவார பகுதியில் தூர்வாரப்பட்ட பணிகள் மற்றும் மழைநீர் வடிகின்ற விதம் உள்ளிட்டவைக் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
காலை 8 மணியளவில் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டு அறையில் நீர்நிலைகளின் தற்போதைய நிலை, பொதுமக்களின் கோரிக்கைகள், அதற்கு அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை எழிலகத்தில் இயங்கும் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேரிடர் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானியுடன் தமிழ்நாடெங்கும் பரவலாக பெய்து வரும் மழை நிலவரம், நிவாரணப் பணிகளுக்கு தயார் நிலையில் களத்தில் உள்ள பேரிடர் மீட்புக் குழுக்களின் விவரம், மழைக்கால மருத்துவ முகாம்கள், மழைநீர் தேங்கினால் அதனை அகற்றும் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ”சென்னை மாநகராட்சியில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 46.6 செ.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தேனாம்பேட்டையில் 6.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதுவரை மாநகராட்சி பகுதியில் 8 மரங்கள் விழுந்துள்ளது. இதுவரை மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. 300 நிவாரண மையங்கள் அடிப்படை வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதையில் கணேசபுரம், பெரம்பூர் சுரங்கப்பாதைகள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு உடனடியாக தண்ணீர் அகற்றி போக்குவரத்து திறந்துவிடப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் “தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிகபட்சமாக சிவகங்கையில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 931 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் அதிகாரிகளுடன் சென்று கொட்டும் மழையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தங்கை மீது மட்டும் பாசம்… சென்னையில் கொரிய மாணவரின் விபரீத முடிவு!
கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புக்கு தடை : அன்பில் மகேஸ் உத்தரவு!