தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாக குவிக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், “ சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. மழை நின்றதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தொடங்கப்பட்டது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக 4,5 நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை நானே தொடங்கி வைத்தேன்.
இப்போது தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அரசு இயந்திரம் முழுமையாக தென்மாவட்டங்களில் குவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகள், அமைச்சர்களிடம் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கிறேன்.
சென்னை மழை வெள்ள பாதிப்பு அனுபவங்களை கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென் மாவட்ட மக்களை காப்போம். இது உறுதி” என்றார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தென்காசி, குமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் கோவையில் இருந்தவாறு காணொளி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தென் மாவட்டங்களை உலுக்கும் கனமழை… முப்படைகளின் உதவி கோரியது தமிழக அரசு!