திருநெல்வேலி மாநகரத்தை உள்ளடக்கிய மாவட்டம் முழுதும் வரலாறு காணாத மழையால் பெரும் சேதம் அடைந்திருக்கிறது. குறிப்பாக நெல்லை மாநகரம் கடுமையான வெள்ளப் பெருக்கால் மூழ்கிவிட்டது.
நெல்லை ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம், இரண்டடுக்கு மேம்பாலம் எல்லாம் மூழ்கிவிட்டன.
டிசம்பர் 17 ஆம் தேதிக்கு முன்பிருந்தே வானிலை ஆய்வு மையத்தால் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கடும் மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதுபோல டிசம்பர் 17 ஆம் தேதி காலை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை தொடங்கியது. நேரம் ஆக ஆக அதிகரித்த கன மழை நேற்று பகல் 12.30க்கெல்லாம் உச்சகட்டத்தைத் தொட்டது.
ஆனால் அப்போது நெல்லை மேயர் சரவணன் நெல்லையில் இல்லை, மாறாக சேலத்தில் இளைஞரணி மாநில மாநாடு நடைபெற இருக்கிற பகுதிக்கு சென்று பார்வையிட்டுக் கொண்டும் மாநாட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்தார் சரவணன்.
அப்போது நெல்லை மேயர் சரவணனை கவனித்த மாநாட்டுப் பொறுப்பாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, ‘என்னய்யா உங்க மாவட்டத்துல வரலாறு காணாத மழை பேஞ்சிக்கிட்டிருக்கு. நீ இங்க என்னய்யா பண்ற…? போய்யா போ. ஆபீசர்லாம் அங்கதான் போயிட்டிருக்காங்க’ என்று சத்தம் போட்ட பிறகுதான் நேற்று இரவு நெல்லை திரும்பியிருக்கிறார்.
நெல்லையின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
“நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரத்தில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையிலும் நெல்லை மாநகர மேயர் தன்னுடைய பதவியைக் காப்பாற்ற இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே சென்னையில்தான் இருந்தார்.
கவுன்சிலர்களுக்கும் தனக்கும் இடையிலான பிரச்சினைகளை தீர்க்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. வழக்கமாக பருவ மழைக்கு முன்பாக நடத்தப்படும் ஆய்வுப் பணிகளை கூட மேயர் நடத்தவில்லை. திமுக கவுன்சிலர்கள் சரவணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் மற்ற கட்சி கவுன்சிலர்களை பற்றி கேட்கவே வேண்டாம். கவுன்சிலர்களோடும் முறையான தகவல் தொடர்பு இல்லை, அதிகாரிகளோடும் சரியான ஆலோசனை இல்லை.
நெல்லை மாநகரத்தில் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் தயார் படுத்த வேண்டிய மேயர் சென்னையில் உட்கார்ந்துகொண்டு தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், முதல்வர் ஸ்டாலின் உதவியாளர், அமைச்சர் உதயநிதியின் உதவியாளர், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை பார்ப்பதையே வேலையாக வைத்திருந்தார்.
இதனால் நெல்லை மாநகராட்சி கிட்டத்தட்ட முடங்கிவிட்டது. இந்த நிலையில்தான் அமைச்சர் நேரு மற்றும் உதயநிதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நேற்று இரவுதான் நெல்லை மேயரே நெல்லைக்கு வந்திருக்கிறார்.
இப்படி ஒரு வரலாற்றுப் பேரழிவை நெல்லை சந்தித்துக் கொண்டிருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கு தற்போதைய நெல்லை மேயர் சரவணனும் முக்கிய காரணம். முதலமைச்சர் ஸ்டாலினிடம் இவரைப் பற்றி பல புகார்கள் கத்தை கத்தையாக சென்றாலும், ‘இந்த ஒரு மேயரை மாத்தினோம்னா இதேபோல பல மாநகராட்சிகளிலும் மேயரை மாத்தணும்னு பிரச்சினை கெளம்பும்’ என்ற வாதத்தை சொல்லி சிலர் மேயர் சரவணன் மீது நடவடிக்கை எடுப்பதைத் தடுத்துவிட்டனர். அதன் விளைவை நெல்லை இப்போது அனுபவிக்கிறது” என்றார்கள்.
நேற்று இரவு நெல்லை வந்த மேயர் சரவணன், அதிகாலை வரை ஒவ்வொரு அதிகாரியாக போன் போட்டு விசாரித்திருக்கிறார். அதன்படி இன்று காலை நெல்லை டவுனில் இருக்கும் தனது 16 ஆவது வார்டில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பணிகளைத் தொடங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்