சார்… சார்… அநியாயமா இருக்கு : சட்டப்பேரவையில் துரைமுருகன் – எடப்பாடி இடையே காரசார விவாதம்!

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகனுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் இன்று(டிசம்பர் 9) கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் டங்ஸ்டன் உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அரிட்டாப்பட்டி, நாய்க்கர்ப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதால் அந்த பகுதிகளில் பதற்றம் நிலவுவதாகவும், இதன் காரணமாக முதல்வர் பிரதமருக்கு 20.11.2024 அன்று கடிதம் எழுதியதாகவும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், 3.10.2023 அன்று நீர்வளத்துறை அமைச்சர் ஒரு கடிதம் எழுதியதாகவும், இதற்கு 2.11.2023 அன்று மத்திய அரசிடம் இருந்து பதில் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவ்விரு கடிதங்களில் என்ன இருக்கிறது என்று முழுமையாக குறிப்பிடப்படவில்லை.

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, சுரங்கம் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி & ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் (2023) 17.8.2023 முதல் அமலுக்கு வந்துள்ளதாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது.

மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திருத்தச் சட்டத்தில் பிளாட்டினம், டங்ஸ்டன் போன்ற 20 அரிய வகை கனிமங்கள் கிரிட்டிக்கல் மினரஸ் என்று அறிவித்து , அவை ஏல முறையில் மத்திய சுரங்கத் துறையே செயல்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம் மத்திய அரசின் அதிமுக்கிய கனிமங்கள் மத்தியில் டங்ஸ்டன் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அப்படியெனில், 3.10.2023 அன்று நீர்வளத் துறை அமைச்சர் மத்திய சுரங்கத் துறைக்கு எழுதிய கடிதத்தில் இந்த அரசின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளாரா என்பதை அறிய விரும்புகிறேன்.

இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் போது திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதை இந்த அரசு செய்ய தவறிவிட்டது” என்று கூற,

உடனடியாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எழுந்து, “மத்திய அரசாங்கத்தில் இருந்து இந்த சட்டமுன்வடிவை மாநிலங்களுக்கு அனுப்பி கருத்து கேட்டபோது அப்போதே தமிழக அரசு திட்டவட்டமாக எதிர்ப்புத் தெரிவித்தது.

ஒரு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், strategic and criminals minerals என்ற போர்வையில் ஒன்றிய அரசு நினைத்தால் எங்குவேண்டுமானாலும் சுரங்கப்பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று கூறினோம்.

இருந்தபோதிலும் ஒன்றிய அரசு தனக்கு உரிய பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் சட்டமுன்வடிவை நிறைவேற்றிவிட்டு நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.

சட்டமுன்வடிவிலேயே தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது” என்று பதிலளித்தார்.

அப்போது சபாநாயகர் அப்பாவு, “பல சட்டங்கள் விவாதம் இல்லாமலே அங்கு வந்திருக்கிறது. இது விவாதத்துக்கு வந்ததா என்பதே பெரிய கேள்வி” என்று சொல்ல,

இதற்கு எடப்பாடி பழனிசாமி, அப்படியானால் எதிர்ப்புத் தெரிவித்தோம் என்று சொல்கிறீர்களே என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் அவர், “இதுபோலத்தான் அதிமுக ஆட்சிக் காலத்தில் காவிரி நதிநீர் பிரச்சினை சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அப்போதிருந்த மத்திய அரசு நிறைவேற்ற காலதாமதம் செய்த காரணத்தால், அதை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக எம்.பி.க்கள் 37 பேர் தொடர்ந்து அவையை 22 நாட்கள் ஒத்திவைக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

மாநில உரிமை பறிபோகும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மெஜாரிட்டி இருந்ததால் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்று சொல்கீறீர்கள். ஆனால் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு மக்கள்தானே… எதற்கு மக்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். சட்டம் நிறைவேற்றப்பட்டது, அதனால் அவர்கள் சுரங்கப் பணிகளை மேற்கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

முதல்வர் 20-11-2022 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க குத்தகையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமை ஏலத்தை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தியதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி,

“மத்திய அரசு 2024 பிப்ரவரி மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒப்பந்தபுள்ளி வெளியிட்டது முதல் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் அதற்கான உரிமையை இறுதி செய்தது வரை சுமார் 10 மாதங்கள் இந்த அரசு அமைதியாக இருந்திருக்கிறது.

மாநில அரசு உரிய நேரத்தில் மத்திய அரசுக்கு தனது கருத்தை தெரிவிக்காத காரணத்தால் இப்படிப்பட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
ஓராண்டுக்கு முன்பு மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், மாநில அரசின் கோரிக்கையை மத்திய சுரங்கத்துறை நிராகரித்ததாகவும் வந்த செய்திகள் மதுரை மக்களின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்துதான் இந்த அரசு பிரதமருக்கு கடிதம் எழுதியதாக தெரிகிறது. இப்போது கடிதம் எழுதியதற்கு பதில் முன் கூட்டியே எழுதியிருந்தால் இந்த டங்ஸ்டன் உரிமத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் மேலூரைச் சுற்றியுள்ள எட்டிமங்கலம், கிடாரிப்பட்டி, நரசிங்கப்பட்டு, அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் பாதிக்கப்படும். கடந்த கிராமசபை கூட்டத்தில் மேலூரை சுற்றியுள்ள 25 கிராமங்கள் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன” என்று எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும் போதே,

அவை முன்னவர் கருத்தை கேட்கலாம் என்று சபாநாயகர் அப்பாவு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பேச அனுமதித்தார்.

அப்போது பேசிய துரைமுருகன், “ஒரு தவறான செய்தியை திருப்பி திருப்பி பதிவு செய்கிறீர்கள். கடிதம் எழுதுனீர்கள்… அதில் என்ன இருக்கிறது என்று சொல்லவில்லை, அதற்கு மத்திய சர்க்கார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை என்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று குறிப்பிட்டதுடன்,

எடப்பாடி பழனிசாமியை பார்த்து, “நீங்களும் ஒரு முதலமைச்சராக இருந்தவர். இதுபோல ஒரு தீர்மானத்தை கொண்டு வரும்போது, அந்த ஆவணங்கள் அனைத்தும் தீர்மானத்தில் வராது. உங்களுக்கு அது தேவை என்றால் நீங்கள் தனித் தீர்மானம் போட்டு தெரிந்துகொள்ளலாம். ஒரு தீர்மானத்தில் மைய கருத்து மட்டும்தான் இருக்கும்.

சுரங்கம் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி & ஒழுங்குமுறை சட்டத்தை திருத்திவிட்டு, ஏலம் விடும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உண்டு என்கிறார்கள்.

இதைவிட கேவலமாக, ஒன்றிய அரசால் தேர்வு செய்யப்படும் ஏலதாரர்களுக்கு சுரங்க குத்தகை வழங்கும் அதிகாரம் மட்டுமே மாநில அரசுக்கு உள்ளது என்கிறார்கள்.

இது சுயமரியாதைக்கே விடுக்கப்பட்ட சவால். கனிமவளம் மட்டுமல்ல.. நமது மானமே போய்விட்டது. ஏலம் விட்ட பிறகு ஹிந்துஸ்தான் ஜிங்கிற்கு உரிமை கொடு என்று சொன்னால், இவர்கள் என்ன எஜமானார்களா…. மத்திய சர்க்காரிடம் மாநில சர்க்கார் கைக்கட்டி நிற்கிற வேலைக்காரனா…

அந்த அதிகாரத்தோடு சட்டத்தை போட்டிருக்கிறார்கள்…. இந்த சட்டத்தை தெரிவித்த உடனே ஒன்றிய சுரங்க அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.

விவரமாக கடிதம் எழுதினீர்களா என்று கேட்கிறீர்களே… இதோ கேளுங்கள்… நில உரிமைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் , மேற்படி சட்டத்திருத்தம் மாநில அரசின் உரிமைகளை பறிப்பது போல் ஆகிறது என்று தெரிவித்திருந்தேன்.

எனவே முக்கியத்துவம் மற்றும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களை, சுரங்க குத்தகை வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். இதை விட என்ன சொல்வது.

இதற்கு ஒன்றிய அரசு, எங்களுக்குதான் அதிகாரம் இருக்கிறது… எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று சொல்லிவிட்டு விட்டுவிட்டார்கள்.

இந்தசூழலில், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கடிதம் எழுதியதாகத் தெரிய வருகிறது, தெரியவருகிறது என்று பேசியிருக்கிறீர்கள்” என்று துரைமுருகன் ஆவேசமாக பதிலளித்தார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி, “நீங்கள் கடிதம் எழுதியிருக்கிறீர்கள்… என்ன விவரம் என்று எங்களுக்கு எப்படி தெரியும். நீங்கள் சொன்னால்தானே தெரியும். இப்போதுதானே சொல்லியிருக்கிறீர்கள். அதனால் தான் ‘நான் தெரியவருகிறது’ என்றேன். இதை கிண்டலடித்து சொன்னால் என்ன நியாயம்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு துரைமுருகன், “இப்போதுதானே தீர்மானம் வருகிறது. நாங்கள் எழுதிய கடிதத்தை உங்களுக்கு ஒன்று அனுப்ப வேண்டுமா…” என்று கோபமாக கேள்வி எழுப்ப,

குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “தெரியவருகிறது என்றுதான் சொல்லமுடியும், உங்கள் கவனத்துக்கு நாங்கள் தரவில்லை என்பதை அவைமுன்னவர் தெளிவுபடுத்திவிட்டார்” என்று சொல்ல

உடனே எடப்பாடி பழனிசாமி, “எங்களை பேச விடுங்கள்… நீங்கள் எழுதிய கடிதம் பற்றி எங்களுக்கு எப்படித் தெரியும். நீங்கள் வெளியிட்டிருந்தால் தானே எங்களுக்கு தெரியும். அதனால் தானே தெரியவருகிறது என்று சொல்கிறேன். அப்படி சொன்னதால்தான் நீங்கள் விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள்…” என்று கூற,

அதைத்தான் அவர்களும் சொல்கிறார்கள்… நீங்கள் இப்படிதான் சொல்லமுடியும் என்று அப்பாவு பதிலளித்தார்.

அப்போது எழுந்து பேசிய துரைமுருகன், “எதிர்க்கட்சித் தலைவர் அனுபவமிக்கவர். முதலமைச்சராக இருந்தவர். இவர் முதலமைச்சராக இருந்த போது மத்திய சர்க்காருக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்றையாவது எங்களுக்கு கொடுத்திருக்கிறீர்களா…

சார்… அரசு சார்.. சீஃப் மினிஸ்டர் பிரைம் மினிஸ்டருக்கு அனுப்புகிறார். அதை உங்களுக்கு அனுப்பனுமா… என்ன சார் அநியாயமாக இருக்கிறது.

ஒன்னே ஒன்னு கேட்கிறேன். இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா… எதிர்க்கிறீர்களா…. சொல்லுங்க முடித்துக்கொள்ளலாம்…” என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, சட்டம் கொண்டு வந்த பிறகு, தீர்மானம் கொண்டு வந்த பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார் எடப்பாடி பழனிசாமி.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், “எங்களுடைய ஆதரவு பெற்றா சட்டம் நிறைவேறியது. எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்” என்றார்.

அப்போது துரைமுருகன், “எதிர்க்கட்சி தலைவர் ஒழுக்கமாக பேசுகிறார். நானும்பேசிவிடுவேன். ஏற்கனவே இந்த திட்டம் பற்றியெல்லாம் மத்திய அரசுக்கு தெரிவித்தேன். கால தாமதம் ஆனதால் தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறோம்” என்று காட்டமாக சொல்ல,

எடப்பாடி பழனிசாமி, “ ஒன்னும் சாதிக்க முடியலனா இப்படிதான் பேசமுடியும். சரக்கு இருந்தால் தானே பேசமுடியும். அவை முன்னவர், எல்லோருக்கும் உதாரணமாக இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஆ.. ஊன்னு கத்தினால் என்ன அர்த்தம்… மக்களோடு பிரச்சினையை உயிரை கொடுத்தாவது காப்பாற்றனும். இந்த வேலை எல்லாம் இங்க நடக்காது” என்று காட்டமாக தெரிவித்தார்.

இதையடுத்து அமைச்சர் மூர்த்தி, மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்துகொண்டேன் என்று சொல்ல…

முதல்வர் ஸ்டாலின் எழுந்து, “டங்ஸ்டன் சுரங்கம் வரும் என்ற சூழ்நிலை வந்தால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்” என்று எடப்பாடி பழனிசாமியை பார்த்து சொன்னார்.

இதையடுத்து இந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்” – ஸ்டாலின்

டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்… சட்டமன்றத்தில் தீர்மானம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts