kilambakkam issue debate in assembly

கிளாம்பாக்கம் விவகாரம் : “இத்தோடு முடித்துக்கொள்வோம்” – எடப்பாடி vs ஸ்டாலின்

அரசியல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து இன்று சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 13)இரண்டாவது நாளாக நடைபெற்றது,

அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “தென்மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு வரும் பயணிகள் அங்கிருந்து சென்னைக்குள் வர உரிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரும் வரை பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அவர் பேசும் போது கிளாம்பாக்கம் என்பதற்கு பதில் கேளம்பாக்கம் என்று கூறினார்.

பயணிகளுக்கு பிரச்சினை இல்லை…

செல்லூர் ராஜுவின் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “அது கேளம்பாக்கம் இல்லை. கிளாம்பாக்கம் என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். கிளாம்பாக்கத்தை உங்களுடைய ஆட்சியில் தான் தேர்ந்தெடுத்தீர்கள். 30 சதவிகிதத்தில் நீங்கள் விட்டு போன திட்டத்தை சி.எம்.டி.ஏ. சார்பில் அமைச்சர் சேகர்பாபு கூடுதல் வசதிகளோடு பார்த்து பார்த்து செய்தார்.

ஏற்கனவே பாரிமுனையில் இருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையத்தை மாற்றிய போது இதுபோன்றுதான் பேசப்பட்டது. மாற்றம் ஏற்படும் போது தயக்கம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பேருந்தில் பயணிக்கும் யாரும் பிரச்சினை எழுப்பவில்லை. பேருந்தில் பயணிக்காத உங்களை போன்றவர்கள்தான் பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

இப்போது 20 சதவிகித பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், 80 சதவிகித பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது.

வடசென்னை பகுதி மக்களுக்காக முதல்வரின் உத்தரவின் பேரில் 20 சதவிகித பேருந்துகள் மாதவரத்தில் இயக்கப்படுகிறது.

இனி இங்கிருந்து இயக்க வேண்டும், அங்கிருந்து இயக்க வேண்டும் என்று சொன்னால் மக்களுக்கு குழப்பம் வரும்.

இரண்டு இடங்களில் இருந்தும் இயக்குவது சாத்தியமில்லாதது.

கிளாம்பாக்கம் முழுமையாக செயல்பட தொடங்கிவிட்டது. எந்த பிரச்சினையும் இல்லாமல் மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். அண்ணன் செல்லூர் ராஜு வந்தால் நானும் அமைச்சர் சேகர் பாபும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றி காண்பிக்கிறோம், ஏதேனும் வசதி தேவைப்பட்டால் சொல்லுங்கள் செய்து தருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

இதனால் தான் அவதூறு பரப்புகிறார்கள்

kilambakkam issue debate in assembly

அவரைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை திறப்பதற்கு முன்னதாக ஒரு விமர்சனமும், திறப்பதற்கு பின் ஒரு விமர்சனமும் உள்ளது.

2013ஆம் ஆண்டில் பேரவையில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அன்றைய ஆட்சி அறிவித்தது. இதற்காக 2018ஆம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஒப்பந்தப்புள்ளி முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

அந்த ஒப்பந்தத்தின் கால அளவு 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம். இதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கிளாம்பாக்கம் பேருந்து குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி  இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

அந்த ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி, ஆய்வு நடத்தப்படவில்லை. ஆனால் இந்த ஆட்சியில் முன்னதாக இத்துறை அமைச்சராக இருந்த முத்துசாமியும், நானும் 20க்கும் மேற்பட்ட முறை ஆய்வு செய்திருக்கிறோம்.

நேற்று கூட எதிர்க்கட்சி தலைவர், போதிய வசதி இல்லை என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நான் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கோயம்பேடு பேருந்து நிலையம் 33 ஏக்கரில் இருந்தது. இப்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 86 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.

இந்த 86 ஏக்கரில், குடிநீர், கழிப்பறை, சுமைகளை தூக்குவதற்கு ட்ராலி, பேட்டரி கார்கள், நடைமேம்பாலம் மற்றும் மின் தூக்கிகள் என எத்தனையோ வசதிகள் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கின்றது.

பாரிமுனையில் இருந்து கோயம்பேட்டுக்கு பேருந்து நிலையத்தை மாற்றிய போது ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படவில்லை. தொடர்ந்து பாரிமுனைக்குச் சென்றதால் போக்குவரத்தில் நெரிசல் அதிகமானது.

2002ல் கோயம்பேடு பேருந்து நிலையம் திறக்கப்பட்டாலும் 2009ல் தான் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டுக்கு வந்தன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

ஆனால் கிளாம்பக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 45 நாள் தான் ஆகிறது. இந்த 45 நாட்களும் தினம்தோறும் 2,450 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடந்த சனிக்கிழமை கிளாம்பாக்கத்துக்கு ஆய்வுக்கு சென்றோம். அன்றைய தினம் மட்டும் 1,07,000 பேர் பயணித்திருக்கின்றனர்.

கிளாம்பாக்கத்தில் ஓட்டுநர்களுக்கு அறைகள், மருத்துவமனைகள், கடைகள், 6 கோடி ரூபாயில் பூங்கா, 1700 மீட்டர் அளவுக்கு மழைநீர் கால்வாய் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பயணிகள் யாரும் குறை சொல்லவில்லை. இரவு 12 மணிக்கு மேல் 4 மணிக்குள் வரும் பயணிகளுக்கு உண்டான பேருந்து வசதிகள் இல்லை என்பதால், சில ஊடகங்களால் திட்டமிட்டே பிரச்சினைகள் பரப்பப்படுகிறது.

அண்மையில் திருச்சியில் புதிய விமான முனையத்தை பிரதமர் திறத்து வைத்தார். ஆனால் இன்னும் அது முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் கிளாம்பாக்கம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

கலைஞர் பெயரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வைத்தததால் தான் இவ்வளவு அவதூறுகளை பரப்புகிறார்கள் என கருதுகிறேன்” என பதிலளித்தார்.

அவசரப்பட்டு திறக்கப்பட்ட பேருந்து நிலையம்

kilambakkam issue debate in assembly

அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசினார்.

அவர், “சிறு சிறு வசதிகளை சரி செய்து திறந்திருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்காது. பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம்.

நடுரோட்டில் பயணிகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இதையெல்லாம் அமைச்சர் பார்த்தாரா இல்லையா என தெரியவில்லை. பயணிகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

அவசரப்பட்டு பேருந்து நிலையத்தை திறந்துவிட்டார்கள்” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய சேகர்பாபு, “அவசரப்பட்டு பேருந்து நிலையத்தை திறந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். அவர்கள் செய்ய தவறியதை இந்த அரசு செய்திருக்கிறது. அவர்கள் காலத்தில் 30 சதவிகித பணிகள் தான் முடிக்கப்பட்டிருந்தது.

நாங்கள் 70 சதவிகித பணிகளை முடித்து, 100 கோடி ரூபாய் செலவில் திட்டமிட்டு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறோம்.

அவர் வந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிப்பார்த்தால் , நிச்சயம் எதிர்க்கட்சி தலைவரே முதல்வரை புகழக்கூடிய அளவுக்கு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, “பயணிகள் சொல்கிற கருத்துகளின் அடிப்படையில் தான் நாங்கள் அறிக்கை வெளியிட்டோம்.

2020ல் கொரோனா காலம். இதனால் ஓராண்டு காலம் எந்தப் பணியும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் பேருந்து நிலைய பணிகளை முடிக்கவில்லை. பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நீங்கள் அதனை செய்தீர்கள்.

இப்போது கேட்பது சிறு, சிறு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்பதுதான். சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்து திறந்திருந்தால் இந்த விவாதமே எழுந்திருக்காது” என கூறினார்.

முடித்துக்கொள்வோம்…

kilambakkam issue debate in assembly

கடைசியில் எழுந்து கிளாம்பாக்கம் விவாகாரம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின். “எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது போல சிறு சிறு பிரச்சினைகள் அல்ல, பெரிய பிரச்சினைகளே இருந்தன. அத்தனையும் தீர்த்து வைத்து தான் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளோம்.

இன்னும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நேரடியாக வாருங்கள்… நீங்கள் சொல்லும் குறைகளை தீர்த்து வைக்க காத்திருக்கிறோம் என்று சொல்கிறோம். எனவே, இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்து அமர்ந்தார்.

இதனிடையே கிளாம்பாக்கம் விவகாரம் குறித்து தொடர்ந்து அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் பேசிக்கொண்டிருந்ததால் அவையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் போதும் போதும் என்று குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

குழந்தை பிறந்த 2 நாட்களில் தேர்வு… சினிமாவை மிஞ்சிய நிஜம்… நீதிபதியான முதல் பழங்குடி பெண்!

டெல்லி : விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு… தலைவர்கள் கண்டனம்!

 

+1
1
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0