செந்தில்பாலாஜியின் இதயம்: ரிப்போர்ட் இதுதான்!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான மூன்று மனுக்கள் இன்று (ஜூன் 15) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு உத்தரவு வழங்கப்படுகின்றன.
ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை முதன்மை அமர்வு நீதிபதி அல்லியிடம் மனு செய்துள்ளது.
அதேநேரம் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரியும், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரியும் செந்தில்பாலாஜி தரப்பு மனு செய்துள்ளது.
இந்த நிலையில் செந்தில்பாலாஜியின் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்ற கேள்விகள் எல்லா திசையில் இருந்தும் எழ ஆரம்பித்துள்ளன.
நேற்று (ஜூன் 14) நடந்த விசாரணையில், ‘தமிழ்நாடு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் அறிக்கையை நம்ப முடியாது’ என்று அமலாக்கத்துறை கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.
செந்தில்பாலாஜியின் உடல் நலம் பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது,
“செந்தில்பாலாஜிக்கு இப்போது 47 வயதாகிறது. ஒவ்வொரு நாளும் மிக டைட் ஆன பணிகளை வைத்துக் கொண்டிருப்பார்.
கோவை, சென்னை, கரூர் என்று தொடர்ந்து அலைந்துகொண்டிருப்பார். அமைச்சரானதும், கோவைக்கு பொறுப்பு அமைச்சரானதும் ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்தது.
காலை கோவை, மாலை சென்னை, இரவு கரூர் என்றெல்லாம் அவரது பல நாட்கள் போய்க் கொண்டிருந்தன.
இதைப் பார்த்த அவரது மருத்துவ நண்பர்கள் உடம்பைப் பாத்துக்கங்க என்று எச்சரித்துக் கொண்டே இருந்தனர்.
ஏனென்றால் அவரது தம்பி அசோக்கிற்கு ஏற்கனவே இதய பிரச்சினை ஏற்பட்டு ஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் செந்தில்பாலாஜியையும் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளனர் குடும்பத்தினர். எதேச்சையாக இந்த வாரம் அவர் ஒரு செக்கப் போகலாம் என்று திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். ஜூன் 13 காலை வாக்கிங் உடையோடு வீட்டுக்குள் சென்ற செந்தில்பாலாஜியை உடை மாற்றாமல் கூட விசாரித்துள்ளனர்.
18 மணி நேர விசாரணைக்குப் பின் இரவு அவரை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியிருக்கிறார்கள். அப்போதுதான் சுருக் சுருக் என்று கடுமையான வலி ஏற்பட்டு கதறியிருக்கிறார் செந்தில்பாலாஜி.
உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில் செந்தில்பாலாஜியின் இருதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் மூன்று அடைப்புகள் இருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
70%, 90%, 50% என்ற விகிதங்களில் அந்த மூன்று அடைப்புகள் இருக்கின்றன. அதனால்தான் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ஏற்கனவே செந்தில்பாலாஜி மருத்துவர்களின் எச்சரிக்கையை பெரிதாகக் கண்டுகொள்ளாத நிலையில்… விசாரணையின் போது ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தமும் காரணமாக இருக்கலாம்” என்கிறார்கள் மருத்துவ வட்டாரங்களில்.
–வேந்தன்
ஊக்கத்தொகையுடன் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
செந்தில் பாலாஜி கைது: கலங்கிய பிடிஆர்!