judge accept senthil balaji request
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் நேற்று அமலாக்கத் துறை வாதம் நிறைவடைந்த நிலையில், வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை ஒத்திவைத்தார்.
இதனிடையே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார்.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கக்கூடாது என செந்தில் பாலாஜி கோருவதில் எந்த அடிப்படையும் இல்லை என்று தெரிவித்த நீதிபதி அல்லி, குற்றச்சாட்டுப் பதிவுக்காக இன்று நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து இன்று (பிப்ரவரி 16) அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன்,
“இந்த மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். அவசர வழக்காக விசாரிக்காவிட்டால், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிடும்”என்று முறையிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கமான முறையில் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தனர்.
அதுபோன்று இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி,
ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்குப் பதில் 21ஆம் தேதி ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையைப் பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்தசூழலில், செந்தில் பாலாஜி வழக்கில் இன்று குற்றச்சாட்டுப் பதிவு இல்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று நேரில் ஆஜராக ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், குற்றச்சாட்டுப் பதிவு இல்லை என்பதால் நேரில் ஆஜராகத் தேவையில்லை, நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காகக் காணொளியில் ஆஜர்ப்படுத்தினால் போதும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலம் இன்று பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அப்போது 21ஆவது முறையாக வரும் பிப்ரவரி 20ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டெல்லி போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு!