கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிவது உட்பட முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 1) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ 110 நாடுகளில் கொரோனாவின் பிஏ4, பிஏ5 வகை வேகமாகப் பரவி இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 10 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு 1000த்திலிருந்து 5000மாக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் 2000த்துக்கும் அதிகமாகப் பரவி வருகிறது.
பிஏ1, பிஏ2.38 போன்ற வகைகளும் பிஏ4, பிஏ5 வகைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பது தொடர்பாக இன்று காலை அனைத்து துறை அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த வகை வைரஸ் தொற்றால் அதிகளவு உயிரிழப்புகள் இல்லை என்றாலும், வேகமாகப் பரவும் தன்மை கொண்டது.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பாட்டால் கூட வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரவுகிறது. எனவே இதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். 10க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், அரசு நிகழ்ச்சிகள், சமுதாய விழாக்கள் போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்