விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிட்டால் அதிமுக 4-வது இடம் பிடிக்கும் என தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 5) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையின் பேச்சுக்கு காரசாரமாக பதிலடி கொடுத்தார்.
மிகப் பெரிய அரசியல் ஞானி!
அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 3 அல்லது 4 ஆம் இடம் தான் வந்திருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி உள்ளது.
ஆனால் தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே நாங்கள் அறிவித்துள்ளோம். திமுக பொறுப்பேற்ற பிறகு ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வந்தது. அப்போது திமுக எவ்வாறு நடந்து கொண்டது என்பதை நாடே அறியும். வாக்காளர்களை ஆடுமாடு போல் பட்டியில் அடைத்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுத்து தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை.
“இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது; மக்களவை தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது; தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதிரியும், மக்களவை தேர்தலில் ஒரு மாதிரியும் வாக்களிக்கின்றனர். இதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதா?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்கு மட்டுமே குறைவாக பெற்றுள்ளார். 2ம் இடத்தில் அதிமுக தான் உள்ளது. அதுவும் நாடாளுமன்ற தேர்தலில், சட்டமன்ற தேர்தலில் அல்ல.
வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக பற்றி அண்ணாமலை செய்தி வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை வந்ததற்கு பிறகுதான் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்தது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். உண்மையில் அது அல்ல.
கடந்த 2014-ல் அமைக்கப்பட்ட கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்போது கோவை நாடாளுமன்ற தொகுதியில் சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு 42 ஆயிரம் வாக்குகள் தான் வித்தியாசத்தில் இருந்தார்.
தற்போது அண்ணாமலை திமுக வேட்பாளரிடம் ஒரு லட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று தோற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதா?
வெறுமனே பேட்டியின் வாயிலாகவே அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். அவர் பாஜகவின் தலைவராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு என்ன திட்டத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்தார்? மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக மட்டுமே வைத்துள்ளார்.
அண்ணாமலையால் தான் பாஜக பெரும்பான்மை இழந்தது!
கோவை தொகுதியில் போட்டியிடும்போது 100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். எப்படிப்பட்ட தலைவர்களும் இது போன்ற வாக்குறுதிகளை கொடுத்ததில்லை. இப்போது மத்தியில் பாஜக ஆட்சி தான் இருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அண்ணாமலை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நாடு முழுதும் 300க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது . அண்ணாமலை போன்றவர்களால் தான் மத்தியில் பாஜக பெரும்பான்மையை இழந்தது.
ஓபிஎஸ், சசிகலா : மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை!
அதிமுக ஒன்றும் கார்ப்பரேட் கம்பெனி அல்ல. எங்களுக்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகள் படி தான் கட்சி நடக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுப்படியே ஓ.பி.எஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.
அதிமுகவிற்கு என ஒரு கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தால் தான் சசிகலா கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டபோது ஜானகி எப்படி நடந்துகொண்டாரோ அதேபோல் சசிகலா நடந்துகொள்கிறார். அவர் கட்சியிலேயே இல்லை. பின்னர் எப்படி அவர் கட்சியை ஒன்றிணைக்க முடியும்?” என எடப்பாடி பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்: பிரேமலதா எச்சரிக்கை!