தேசிய கல்வி கொள்கையால் நாடு முன்னேறியுள்ளது : வேலைவாய்ப்பு திருவிழாவில் மோடி பேச்சு!

Published On:

| By Kavi

தேசிய கல்விக் கொள்கையின் மூலம், நாடு தற்போது முன்னேறியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அரசுத் துறைகள், அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 23) வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வழங்கினார்.

இந்த வேலைவாய்ப்பு திருவிழா நிகழ்ச்சியில் பேசிய மோடி, “. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சுமார் 10 லட்சம் நிரந்தர அரசுப் பணிகள் வழங்கப்பட்டு, குறிப்பிடத்தக்க சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுகின்றன,

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களின் கடின உழைப்பு, திறன், தலைமைப் பண்பு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. நாட்டின் கொள்கைகள், முடிவுகள், திறமையான இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துவதால், 2047 – ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற உறுதிபூண்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் உற்பத்தி செய்வோம், தற்சார்பு இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற பல்வேறு முன்முயற்சிகள் இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றன.

இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும், மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் சார் அமைப்பு கொண்ட நாடாகவும் உள்ளது.

இன்று, இந்திய இளைஞர்கள் புதிய நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்று புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்கும் இளம் தொழில்முனைவோர் வலுவான சூழல் அமைப்பினால் பயனடைகிறார்கள்.

அதேபோல், நவீன பயிற்சி வசதிகள், போட்டிகள் நிறைந்திருப்பதால், விளையாட்டு துறையில் வாழ்க்கையைத் தொடரும் இளைஞர்கள் தோல்வியடைய மாட்டோம் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், புதிய இந்தியாவை கட்டமைக்கவும், இளம் திறமையாளர்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. இந்தப் பொறுப்பு கல்வி நிறுவனங்களிடம் உள்ளது.

தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் நவீன கல்வி முறையை நோக்கி இந்தியாவை வழிநடத்தி செல்கிறது. இந்த கொள்கையால் இந்தியா முன்னேறியுள்ளது.

ஆனால் தற்போது அடல் சிந்தனை ஆய்வகங்கள், பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் போன்ற முன்முயற்சிகள் மூலம் புதுமைகளுக்கு உத்வேகம் அளிக்கிறது.

தாய்மொழியில் கற்கவும் தேர்வுகளை எழுதவும் அனுமதிப்பதன் மூலம், 13 மொழிகளில் கிராமப்புற இளைஞர்கள், விளிம்புநிலையில் உள்ள சமூகங்களுக்கான மொழி தொடர்பான தடைகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.

கூடுதலாக, எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான இடஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நிரந்தர அரசுப்பணிகளுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று, 50,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

“இன்று, ஆயிரக்கணக்கான பெண்கள் பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர், அவர்களின் வெற்றி மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும். ஒவ்வொரு துறையிலும் பெண்களைத் தற்சார்புடையவர்களாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 26 வார கால மகப்பேறு விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளது” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கிறிஸ்துமஸ் தினத்தன்று மழை பெய்யுமா? – வானிலை மையம் தகவல்!

அரசு ஊழியரின் சொத்துக்களும், கடன்களும் தனிப்பட்ட விவரங்கள் அல்ல : உயர்நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share